மூன்று மாணவிகளின் மரணம் - தீவிர விசாரணைக்கு ஜெயா உத்தரவு
மூன்று மாணவிகளின் இறப்பு குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு ஆணையிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், மூன்று மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த திருவாரூர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்வரின் மகள் பிரியங்கா, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் சரண்யா மற்றும் சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவரின் மகள் மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் சடலங்களும் கல்லூரியின் முன்புறமுள்ள ஒரு கிணற்றில் 23.1.2016 அன்று கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.
உயிரிழந்த மூன்று மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இம்மூன்று மாணவிகளின் இறப்பு குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு நான் ஆணையிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.