சர்வதேச நீதிபதிகளுக்கும் இடம் வேண்டும்!
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் படவுள்ள விசாரணைப் பொறிமுறைகள் நம்பிக்கையானதாக மாறுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதுடன், இந்த விடயத்தில் மாற்றம் ஏற்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட பிரரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக ஏற்றுக் கொண்டிருந்தது.
அதில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்ள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டில் விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் எனவும், இதற்கு பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் சட்டவல்லுனர்கள், நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் கடந்த வாரம் சர்வசேத ஊடகமான பி.பி.சிக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதன் பின்னணியிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்.