Breaking News

யாழ்.அச்சுவேலி நிலவெடிப்பு விரிசலடைகிறது - அச்சப்படும் மக்கள்

யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி (சனிக்கிழமை) ஏற்பட்ட நிலவெடிப்பு மேலும் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தத் திடீர் நில வெடிப்பின்போது, வீடு ஒன்றின் சுவர் விரிப்பிற்குள்ளாகியதோடு, வீடமைந்த அக்காணியின் நிலத்திலும் மிக நீண்ட தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலவெடிப்பிற்கான காரணத்தினை கண்டறிவதற்கு பல்வேறு தரப்பினரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அன்றைய தினம் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பானது 1.5 சதமீற்றர் அகலத்துக்கு விரிவடைந்துள்ளதாக யாழ்.பல்கலைகழக புவியியற்துறை பேராசிரியர் ரீ.ராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.அத்துடன் புதிய இடங்கள் சிலவற்றிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வெடிப்பு ஏற்பட்ட பகுதிகள் கீழ் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுண்ணக்கல் பாறைகளில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாகவே இந்த நிலைவெடிப்பு ஏற்பட்டதாகவும், இது நில நடுக்கத்தினால் ஏற்பட்டதல்ல என்றும் அவர் மேலும் கூறினார். சனிக் கிழமை ஏற்பட்ட இன் நிலவெடிப்பு அப்பிரதேச மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அது தொடர்ந்தும் விரிவடைவது அவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக ஆதவனின் யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.