புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தன், சுமந்திரன் பிரிட்டனுக்கு விஜயம்
ஐக்கிய இராஜ்ஜியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரித்தானியாவுக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் புதிய அரசியலமைப்புக்கு முன்வைப்பதற்கான யோசனைகளைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவர் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வு செய்வதற்காக நாளை புதன்கிழழை பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது பிரித்தானிய பிரதமர் கமரூனை எதிரி்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை அத்தகவல் உறுதிசெய்யப்படவில்லை.
பிரித்தானியாவில் நடைபெறும் கூட்டமைப்பின் கலந்துரையாடலின் பின்னர் இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ஸ்கொட்லாந்திற்குச் செல்லவுள்ளனர். பிரித்தானியாவின் கீழ் உள்ள ஸ்கொட்லாந்தில் அதிஉச்ச சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.