Breaking News

கொலைக்­குற்­றத்­திற்கு மரண தண்­டனை, ஆயுட்­கால சிறைத்­தண்­டனை வழங்க சட்­டத்­தி­ருத்தம் வேண்டும்!

இந்­தி­யாவின் தண்­டனைச் சட்டக் கோவையில் உள்­ளது போன்று, கொலைக்­குற்­றத்­திற்கு மரண தண்­டனை அல்­லது ஆயுட்­காலச் சிறைத் தண்­டனை வழங்கும் வகையில் இலங்­கையின் தண்­டனைச் சட்ட நட­வடி கோவையில் திருத்தம் செய்­யப்­பட வேண்டும் என யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் ஜனா­தி­ப­திக்கு பரிந்­துரை செய்­துள்ளார்.

யாழ்ப்­பாணம் மிரு­சு­விலைச் சேர்ந்த முரு­கேசு சத்­தி­ய­நாதன் என்­ப­வரை உலக்­கையால் அடித்துக் கொலை செய்­து­விட்டு, அவ­ரு­டைய ஹை ஏஸ் வாக­னத்தைக் கொள்­ளை­ய­டித்துச் சென்ற வழக்கில் தலை­ம­றை­வா­கி­யுள்ள ஒருவர் உட்­பட மூன்று எதி­ரி­க­ளுக்கு நீதி­பதி இளஞ்­செ­ழியன் மரண தண்­டனை விதித்து கடந்த திங்­க­ளன்று தீர்ப்­ப­ளித்­தி­ருந்தார். 

மரண தண்­டனை வழங்கும் ஒரு நீதி­பதி அந்தத் தண்­ட­னையை நிறை­வேற்­று­வது தொடர்பில் தனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யத்தை ஜனா­தி­ப­திக்கு அறிக்கை வடி­வத்தில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தண்­டனை நட­வடிக்கை கோவையில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­மைக்கு அமை­வா­கவே, நீதி­பதி இளஞ்­செ­ழியன் கொலைக்­குற்­றத்­திற்கு மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை வழங்கும் வகையில் இலங்­கையின் சட்ட நட­வடி கோவையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஜனா­தி­ப­திக்குப் பரிந்­துரை செய்­துள்ளார். 

அந்தப் பரிந்­துரை அறிக்­கையில் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது;

இந்­திய உச்ச நீதி­மன்றம் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 4 குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இவர்­களில் ஒரு­வரின் மரண தண்­ட­னையை இந்­திய ஜனா­தி­பதி ஆயுள் தண்­ட­னை­யாகக் குறைத்­திருந்தார். ஏனைய மூவ­ருக்கும் மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்­கான ஆணை ஜனா­தி­ப­தி­யினால் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. மரண தண்­டனை வழங்­கப்­பட்டு, 15- 20 ஆண்­டுகள் சிறை­வாசம் அனு­ப­வித்­ததன் பின்பே, இந்த ஆணையை ஜனா­தி­பதி பிறப்­பித்­தி­ருந்தார். 

மரண தண்­ட­னைக்­கான நீதி­மன்­றத்தின் தீர்ப்பு வழங்­கப்­பட்டு, 20 ஆண்டு காலம் சிறை­வாசம் அனு­ப­வித்­ததன் பின்னர் தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­று­வது அவ­சி­ய­மா என்ற சட்ட வினா தொடுத்து இந்த மூவரும் இந்­திய உச்­ச­நீ­தி­மன்றில் மனு தாக்கல் செய்­தனர். அந்த மனுவை விசா­ரணை செய்த இந்­திய பிர­தம நீதி­ய­ரசர் சதா­சிவம் தலை­மை­யி­லான குழாம் மூன்று பேரி­னதும், மரண தண்­ட­னையை ரத்துச் செய்து அதனை ஆயுள் தண்­ட­னை­யாக மாற்­றி­யது. 

இந்தத் தீர்ப்­புக்குப் பல கார­ணங்கள் கூறப்­பட்­ட­போ­திலும், இந்­திய தண்­டனைச் சட்டக் கோவையில் கொலைக் குற்றம் புரிந்­த­வ­ருக்கு நீதி­மன்றம் மர­ண­தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை வழங்­கலாம் என பரிந்­துரை செய்­யப்­பட்­டிருப்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்தத் தண்­டனை குறைப்பு செய்­யப்­பட்­டது.

கொலைக்­குற்ற வழக்கு ஒன்றில், நீதி­ப­திகள் விரும்­பினால் ஆயுள் தண்­டனை கொடுக்­கலாம் என்ற குற்ற நட­வடி கோவையின் பரிந்­து­ரைக்கு அமை­வா­கவே, ராஜீவ் காந்தி கொலைக் குற்­ற­வா­ளி­க­ளுக்­கான மரண தண்­டனை ஆயுள் தண்­ட­னை­யாக மாற்­றப்­பட்­டது. அதில் ஒருவர் இலங்கைப் பிரஜை. அவ­ருக்கும் இந்­திய உச்ச நீதி­மன்றம் கருணை காட்டி ஆயுள் தண்­டனை வழங்­கி­யுள்­ளது. அங்கே நீதி­ப­தி­க­ளுக்கு கொலைக் குற்­றத்­திற்கு மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை வழங்கும் வகையில் சுதந்­தி­ர­மாகச் செயற்­ப­டு­வ­தற்கு சட்டம் பரிந்­துரை செய்­கின்­றது.

ஆனால் இலங்கை குற்ற நட­வடி கோவையில் பிரிவு 296இன்­படி, கொலைக்­குற்றம் புரிந்த குற்­ற­வா­ளிக்கு மரண தண்­டனை மட்­டுமே நீதி­பதி வழங்க வேண்டும் என சட்டம் கூறு­கின்­றது. நீதி­பதி விரும்­பி­னாலும் குறைந்­த­பட்ச தண்­டனை வழங்க முடி­யாது. எனவே, இந்த சட்ட சரத்து மாற்­றப்­பட வேண்டும். கொலைக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு இந்­திய தண்­டனைச் சட்டக் கோவையின் பிரிவை ஒத்­த­தாக மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை வழங்கும் வகையில் சட்டம் திருத்­தப்­பட வேண்டும். அப்­படி சட்டம் திருத்­தப்­பட்டால் கொலைக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு, வழக்­கு­களின் தன்­மைக்கு ஏற்ற வகையில், நீதி­ப­திகள் மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை வழங்­கு­வ­தற்கு சுதந்­தி­ர­மாகச் செயற்­பட முடியும். 

இந்­தி­யாவின் ஜனா­தி­பதி அப்துல் கலாம் பத­வியில் இருந்த 5 ஆண்­டு­களில் எந்­த­வொரு தூக்குத் தண்­ட­னையிலும் கையொப்பம் இட­வில்லை என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாக இருக்கும். 

இலங்­கையில் போதைவஸ்து குற்றம் என்­பது பார­தூ­ர­மான குற்­ற­மாகும். அத்­த­கைய குற்­ற­வா­ளிக்கு மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை வழங்­கலாம் என்றே சட்டம் பரிந்­து­ரைக்­கின்­றது. எனவே, கொலைக்­குற்­றத்­திற்கு மரண தண்­ட­னைதான் தீர்ப்பு என சட்டம் பரிந்­துரை செய்­தி­ருப்­பது சுதந்­தி­ர­மாகத் தீர்­மானம் எடுக்க முடி­யாத சூழ்­நி­லைக்கு நீதி­ப­தி­களை ஆளாக்­கி­யுள்­ளது. 

மிரு­சுவில் கொலை வழக்கில் மூவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களில் ஒருவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். மற்­றைய இரு­வரும் தண்­டனை பெறு­வ­தற்­காக போகம்­பறை சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றனர். இந்த வழக்கின் குற்­ற­வா­ளிகள் இளை­ஞர்கள். அவர்கள் வாழ வேண்­டி­ய­வர்கள். யுத்­தத்­திலும் சுனா­மி­யிலும் பல இலங்கை பிர­ஜைகள் மாண்டு போனார்கள். மரண தண்­டனை மூலமும் உயிர்கள் காவு கொள்­ளப்­ப­டு­வது ஏற்­பு­டைய­தல்ல. எனவே, இவர்கள் இரு­வ­ரையும் தூக்­கி­லி­டாமல், அவர்கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்கும் வகையில் தண்­டனை குறைப்பு செய்­யு­மாறு பரிந்­து­ரைக்­கின்றேன். 

நீதி­பதி மரண தண்­டனை தீர்ப்பு எழு­து­கின்றார். ஜனா­தி­பதி தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்­கான ஆணையைப் பிறப்பிக்கின்றார். சிறைச்சாலை அலுகோசு கழுத்தில் தூக்குக் கயிற்றைப் போட்டு தண்டனையை நிறைவேற்றுகின்றார். மனித உயிர் ஒன்றைப் பறிப்பதற்கு அரச சேவையில் உள்ள இந்த மூவருக்கும் சட்டம் அனுமதியளித்திருக்கின்றது. மேல் நீதிமன்ற நீதிபதி என்ற முறையில், இது ஒரு சீரான முறையல்ல என்பதே, எனது அபிப்பிராயமாகும். ஆகவே, இந்தியாவில் இருப்பது போன்று குற்ற நடவடி கோவையில் கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனை என்று இலங்கையின் குற்ற நடவடி கோவையில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.