Breaking News

ஞானசார தேரரை பாதுகாக்க வியூகம் - ராவணா பலய, சிங்கள ராவய ஒன்றிணைவு

கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு ஹோமாகம நீதிவான் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பொது பல சேனா அமைப்பினர் ஞானசார தேரரை பாதுகாக்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கலகொட அத்தே ஞானசார தேரர் இருக்கும் ராஜகிரிய விகாரைக்கு அவரின் ஆதரவாளர்கள் பலர் தற்பொழுது வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது டெய்லி சிலோன் செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.

அதேசமயம் கடும்போக்கு பெளத்த அமைப்புக்களான ராவணா பலய, சிங்கள ராவய மற்றும் வில்பத்து விவகாரத்தில் குரல் கொடுக்கும் ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட பலர் பிக்குமாருகளும் அங்கு வருகை தந்துள்ளதாக எனது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதேவேளை அங்கு விகாரையிலிருந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு மிகவும் மோசமான நிலையில் சாடியதாகவும் களத்திலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எக்னெலிகொட கடத்தல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்து, அதற்கு பதிலாக தம்மை கைது செய்யுமாறு மாத்திரமே தான் சட்டத்தரணிகளிடம் கூறியதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் பிரகீத் எக்னெலிகொட வின் மனைவிக்கு கடுமையான வார்த்தைகளால் திட்டியமை தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு, வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நாளைய தினம் பொலிஸுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தாம் ஆரஜாகவுதாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.