புதிய அரசியலமைப்பிற்கு ஆலோசனை வழங்க சி.வி தலைமையில் குழு
இலங்கையில் புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், அதற்கு ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் தமிழ் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வடமாகாண சபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 44ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றபோது, குறித்த பிரேரணையை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபையில் முன்மொழிந்த நிலையில் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த குழுவில் 19 பேர் அங்கம் வகிப்பதுடன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தலைவராகவும், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர வடமாகாண அமைச்சர்களான குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம், ஐங்கரநேசன், ஆகியோரும், வடமாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், லிங்கநாதன் உட்பட மேலும் பல உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவின் மூலம் வடக்கு மக்களின் அபிலாஷைகளை உள்வாங்கி சட்ட வரைபொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.