எதிர்நீச்சல் போடுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள்
விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பயிற்றுநர்கள், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் அதேவேளை, நல்ல மானிடராக அவர்களைப் பண்படுத்தவேண்டும். பிள்ளைகள் இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும் என பெற்றோர் கனவு காண்பதைக் கைவிடவேண்டும். அவரவரிடம் இயல்பாக உள்ள திறமை அவர்களுக்கு கைகொடுக்கும். மத்தியஸ்தர்கள் குறுக்கு வழிகளில் செல்லாமல் நேர்மையாக செயல்படவேண்டும். இளைஞர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளக்கூடாது.
சி சி சி கிரிக்கட் கல்வியக முகாமைத்துவத்தினால் நடத்தப்பட்ட நெல்சன் மெண்டிஸ் சவால் கிண்ணத்திற்கான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கட் போட்டிக்கான பரிளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இலங்கை அணித் தலைவரும் முன்னாள் சர்வதேச பொது மத்தியஸ்தருமான ரொஷான் மஹநாம மேற்கண்டவாறு கூறினார்.
பிஷப் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் விசேட விருந்தினர்கள், அனுசரணையாளர்கள் இளம் விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த வைபவத்தில் நீண்ட உரையாற்றிய மஹநாம, ‘‘இளைஞர்களே, நீங்கள் உங்கள் ஆற்றல்களை நீங்களாகவே மெச்சிக்கொள்ளக்கூடாது. உங்களது திறமையை மற்றையவர்கள்தான் இனங்கண்டு அதனை அங்கீகரிக்கவேண்டும். அத்துடன் நீங்கள் உங்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடியவர்கள் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
‘‘பயிற்றுநர்களே, பெற்றோர்களை ஏறெடுத்து பார்க்காதீர்கள். அவர்கள் யார், அவர்களது தராதரம் என்ன, அவர்களிடமிருந்து என்ன பிரதிபலன்களைப் பெறமுடியும் என்றெல்லாம் சிந்திக்காதீர்கள். எல்லோரையும் ஒரே விதமாக (சமமாக) நடத்துங்கள். சிறுவர்களிடம் உள்ள திறமைகளை முதலில் இனங்காணுங்கள். அதன் பின்னர் அவர்களது திறமைக்கேற்ப அவர்களை பண்படுத்தி சிறந்த கிரிக்கட் வீரர்களாக, எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மானிடர்களாக உருவாக்குங்கள்’’ என்றார்.
தனது உரையின்போது ரொஷான் மஹநாம சிறுபராயத்தில் தனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பயிற்றுநர்களுக்கு உதாரணமாக எடுத்துக்கூறினார்.
‘‘நெல்சன் மெண்டிஸ் எனது தந்தையின் காரில் பயணம் செய்யவிருந்தார். அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு மைதானத்தில் நான் இருக்கவேண்டும். இதன் காரணமாக நான் எனது தந்தையை அவசரப்படுத்தினேன். ஆனால் அவரோ எவ்வாறு உனது குரு, பயிற்றுநரை விட்டுச் செல்வதென எனக் கேட்டார்.
ஒருவாறு வீரர்கள் தங்குமறையில் எனது பைகளை வைத்துவிட்டு திரும்பியபோது, ரொஷான் இங்கே வா என்று எனது குரு மெண்டிஸ் அழைப்பது கேட்டது. அணித் தலைவர் என்பதால் போட்டிக்கான திட்டம் பற்றி கேட்பார் என எண்ணினேன். ஆனால் அவரோ, இப்போது என்ன நேரம் எனக் கேட்டார். சேர் 8.35 மணி என்றேன் நான். நீ இங்கு 8.30 மணிக்கு அல்லவா இருந்திருக்கவேண்டும் எனக் கேட்டார். நான் சேர் என்று கூறியதுதான் தாமதம் ஓர் அதட்டல் கேட்டது. அத்தோடு நான் மௌனித்துவிட்டேன். அதுதான் சகல பயிற்றுநர்களுக்கும் ஒரு பாடமாகும். சிறுவர்களின் பெற்றோர் யார், அவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் சிறுவர்கள் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதுதான் அந்த சம்பவம் கூறும் விடயமாகும்’’ என்றார் மஹநாம.
தற்போது நடக்கக்கூடாத கதைகளை கேட்கநேரிடுவது கவலை தருகின்றது என சுட்டிக்காட்டிய மஹநாம அவ்வாறானவை இடம்பெறக்கூடாது என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
பெற்றோருக்கும் அவர் சிறந்த அறிவுரைகளை வழங்கத் தவறவில்லை.
‘‘பெற்றோரே, உங்களது மகன், மகள் சகல விடயங்களிலும் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் மூலம் உங்கள் கனவுகளை நனவாக்க முயற்சிக்காதீர்கள். அவர்களது இயல்பான ஆற்றல்களை வெளிப்படுத்த விடுங்கள். அத்துடன் மத்தியஸ்தர்கள், பயிற்றுநர்கள், ஆசிரியர்களை உங்களது பிள்ளைகள் விமர்சிக்க விடாதீர்கள். என்னால் ஒரு விடயத்தை மீண்டும் எண்ணிப்பார்க்க முடிகின்றது. எனது இளமைக்கால அனுவங்களைக்கொண்டும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற வகையிலும் நான் இங்கு உங்கள் மத்தியில் பேசவேண்டியுள்ளது. எனக்கு நேர்ந்த ஒரு விடயத்தை பொது இடத்தில் வெளியிடக்கூடாதென்று எனது தந்தை எப்போதும் கூறுவார். ஆனால் நான் எனது குறிக்கோள்கள், இலக்குகளை அடைவதற்கு எவ்வாறான இன்னல்களை எதிர்கொண்டேன் என்பதை இளைவர்களும் பெற்றோரும் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்பதால் அதனை நான் இங்கு கூறித்தான் ஆகவேண்டும்.
‘‘நான் எனது பாடசாலையில் 15 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டேன். நான் எனது அன்பிற்குரிய (நாலந்த) பாடசாலைக்காக முதல் தடவையாக முதல் பதினொருவர் கிரிக்கட் அணிக்காக விளையாடவேண்டும் என்ற பேரவாவுடன் இருந்தேன். எனது இதயத்தில் எப்போதும் இலங்கையும் எனது பாடசாலையும்தான் இருந்தன. அப்போது எனக்கு 14 வயது. ஆனால் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணியில் நான் விளையாடுவதை சக வீரர்களே எதிர்த்தனர். இதன் காரணமாக சுமார் 8 மாதங்கள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டேன்.
எனது தாயார் இங்கே இந்த வைபவத்தில் இருக்கின்றார். எங்கள் வீட்டில் பெற்றோர் இருவரும் சண்டையிட்டனர். ஆனால் சகலவிதமான இன்னல்களையும் எதிர்கொண்டு சமாளிக்கவேண்டும். பாடசாலையை விட்டு விலகுவதில்லை என எனது தந்தையார் கூறினார். எனது தாயாரின் சகோதரர்கள் றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற காலம் அது. இதன் காரணமாக என்னையும் றோயல் கல்லூரியில் இணைப்பதற்கு எண்ணினார்கள். ஆனால் துண்டு துண்டாக உடைந்தாலும் நாலந்தாவில்தான் நான் கல்வி கற்கவேண்டும் என்பதில் எனது தந்தை உறுதியாக இருந்தார்.
அது தான் எனது வாழ்நாளில் பெற்றுக்கொண்ட சிறந்த அனுபவமாகும். வாழ்க்கையில் துணிவு அற்றுப் போகலாம், தடங்கல்கள் ஏற்படலாம். ஆனால் எனது பெற்றோர் ஒருபோதும் பாடசாலையையோ, பயிற்றுநர்களையோ, ஆசிரியர்களையோ அல்லது சக வீரர்களையோ குறைகூறவில்லை. மாறாக எனது குறிக்கோள்களை அடைவதற்கு எதிர்நீச்சல் போடுவதற்கு எனக்கு கற்றுக்கொடுத்தனர்’’ என்றார் மஹநாம.
இதன் மூலம் எல்லோரும் எதிர்நீச்சல் போடுவதற்கு கற்றுக்கொள்வதன் அவசியத்தை அவர் உணர்த்தினார்.
இவ்வாறாக சிறு பராயத்தில் இன்னல்களையும் தடங்கல்களையும் எதிர்கொண்ட ரொஷான் மஹநாம, எதிர்நீச்சல் போட்டு தனது குறிக்கொள்களில் உறுதியாக இருந்ததால்தான் இலங்கை அணியில் இடம்பிடித்ததுடன் சர்வதேச கிரிக்கட் பொது மத்தியஸ்தராகவும் புகழ்பெற்றார்.
இன்னும் ஒரு சம்பவத்தையும் அவர் கூறத்தவறவில்லை.
‘‘இந்தியாவில் கல்விகற்ற எனது மகளுக்கும் சில இன்னல்கள் ஏற்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினேன். என்ன தடைகள் வந்தாலும், என்ன இன்னல்கள் ஏற்பட்டாலும் கல்வியே குறியாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தினேன். இறுதியில் எனது மகள் முதல் அறுவரில் ஒருவராக சித்தி அடைந்தார். ‘‘பெற்றோர்களே பிள்ளைகளை உங்களது கனவு இலக்குகளை நோக்கித் தள்ளவேண்டாம். அவர்களாக தங்களது இயல்பான திறமையை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்களை வழிநடத்துங்கள், அவர்களது குறிக்கோள்களை அடைவதற்கு ஊக்கமளியுங்கள் என நான் இங்கு கூற விரும்புகின்றேன்’’ என்றார்.
மத்தியஸ்தர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றை முன்னாள் சர்வதேச கிரிக்கட் பொது மத்தியஸ்தரான மஹாநான எடுத்துக் கூறினார்.
‘‘சர்வதேச கிரிக்கட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நான் நாடு திரும்பியபின்னர் கேள்விப்பட்ட விடயம் என்னை கவலையடைய வைத்தது. மத்தியஸ்தர்களுடன் சில பயிற்றுநர்கள் இணைந்துகொண்டு போட்டிகளில் தில்லுமுல்லு செய்யவும் எதிரணிகளை தடுமாறச் செய்யவும் முயற்சித்துள்ளனர். எதிரணியின் சில பந்துவீச்சாளர்கள் பந்தை வீசி அடிக்கின்றார்கள் (சக்கிங்) என தீர்ப்பிட்டுள்ளனர். இவ்வாறான குறுக்குவழியில் செல்லாதீர்கள். துருதிருஷ்டவசமாக 1996 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியின்போது நாங்களும் இத்தகைய இன்னலை எதிர்கொண்டது கவலை தருகின்றது. இதன் காரணமாக நாங்கள் மிகவும் நேசித்த கிரிக்கட் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நான் கூறவேண்டும்.
‘‘இறுதியாக, வெற்றிபெற்றவர்களைப் பாராட்டுகின்றேன். ஆனால் இந்த அழகிய விளையாட்டை எவ்வாறு விளையாடவேண்டுமோ அவ்வாறு விளையாடுவதுதான் முக்கியமாகும்.
பதிவாளர் உங்களது பெயருக்கு நேராக தனது பதிவேட்டில் எழுதும்போது நீங்கள் வெற்றிபெற்றீர்களா, தோல்வி அடைந்தீர்களா என எழுதுவதில்லை. ஆனால் நீங்கள் எவ்வாறு விளைய ாடினீர்கள் என்பதைத் தான் குறிப்பிடுவார்கள். இதனை உங்கள் சிந்தைகளில் விட்டுச் செல்கின்றேன்’’ என ரொஷான் மஹநாம தெரிவித்தார்.