தீ மூட்டி தற்கொலை செய்துகொள்வோம் - காணாமல் போனவர்களின் உறவினர்கள் கதறல்
அனைத்து காணாமலாக்கல்களை வெளிப் படுத்துமாறு கோரியும் அரசியல் கைதிகளை விடுதலையை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமது பிள்ளைகள் மற்றும் அரசியல் கைதிகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு அரசாங்கத்திடம் கேரிக்கை விடுத்தனர்.
வீடு வேண்டாம், நிவாரணம் வேண்டாம், எமது பிள்ளைகளை வெளியில் விடுங்கள், இரகசிய முகாம் இல்லை என கூறுகின்றீர்கள், மறைமுகமாக பிள்ளைகளை கொண்டு வந்து விடுகின்றீர்கள் என்றும் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.
தமது பிள்ளைகளை விடுதலை செய்யாவிடின் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்வோம், எமது பிள்ளைகள் இல்லை இனி எமக்கு உயிரும் வேண்டாமென்றும் அவர்கள் கதறி அழுதனர். உறவுகளின் அழுகை குரலை கேட்டு மத்திய பஸ் நிலையத்திற்கு வருகை தந்தவர்கள் சோகத்தில் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.