Breaking News

வடக்கில் இராணுவத்துக்கு தேவையான காணிகள் விடுவிக்கப்படாது – பாதுகாப்புச் செயலர்

வடக்கில் படையினரின் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதைத் துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், இராணுவத் தளபதி, அமைச்சர் சுவாமிநாதன், வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார ஆகியோர் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.இந்த நிலையில், தாம் வரும் புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்று தகவல்களைத் திரட்டவுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்துக்குள் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகவும்  பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு நலன்களுக்குத் தேவைப்படும் காணிகள் விடுவிக்கப்படாது என்றும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடங்களில் காணிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, வடக்கில் உள்ள படைத்தளங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பான எந்த உத்தரவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.