நாங்கள் நிரபராதிகள் - வித்தியா கொலை சந்தேக நபர்கள் தெரிவிப்பு
குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லையெனவும், தம்மை பழிவாங்கும் முயற்சியில் பொலிஸார் வீண்பழி சுமத்தியுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், தாங்கள் நிரபராதிகள் எனவும் குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறும் அவர்கள் நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்த அவர்கள், அப்படி இல்லாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாம் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.புங்குடுதீவு பிரதேச பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை எழு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக வித்தியாவின் உடம்பிலிருந்து பெறப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கையை கையளிப்பதிலும் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.