Breaking News

சம்பந்தனின் கருத்து தொடர்பில் – சிங்களத் தலைவர்களின் கருத்து என்ன?”

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதி உச்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய சமஷ்டி முறை மூலமே, தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு சிங்கள அரசியல் தலைமைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் வெளியிட்டுள்ள கருத்துக்களின் தொகுப்பு.

வாசுதேவ நாணயக்கார -

இலங்கையில் சமஷ்டி முறைமையில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றையாட்சிக்கு ள்ளேயே அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்குள் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை அரச திட்டமிடல், பாதுகாப்பு, நிதி , நிர்வாகம் உட்பட முக்கிய அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்க வேண்டும். சம்பந்தனின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

தினேஸ் குணவர்த்தன – 


ஒற்றையாட்சியை தாண்டி எவ்வாறான முறைமைக்கும் அரசாங்கம் செல்லாது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றையாட்சி முறைமையை மீறி செல்லமாட்டோம் என கூறியுள்ளனர். அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம்.

ஆனால் 16 ஆசனங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைகளை முன்வைப்பது நாட்டில் அரசியல் நெருக்கடிகளையே ஏற்படுத்தும். சம்பந்தனின் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

நாட்டுக்கு எதிரான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்துவிடுவார்கள்.நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்போம். அவ்வாறு நாங்கள் எதிர்க்க முன்வந்தால் அரசாங்கத்துககு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைவிடுத்து சாதாரண பெரும்பான்மைக் கூட கிடைக்காது.

ஐக்கிய இலங்கை என்ற கோட்பாடு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தல், சமஷ்டி முறைமை பகிரப்பட்ட இறையாண்மை உள்ளிட்ட கூட்டமைப்பின் எந்தவொரு கோரிக்கைக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க –

ஒரு சிலர் நாட்டை பிரிக்கும் வகையில் கருத்துக்களை பரப்பினாலும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் பிரிவினைக்கு எதிரான அரசியல் பயணத்தையே விரும்புகின்றனர்.

நாட்டை பிரிக்கும் செயற்பாடுகள் தமிழர் தரப்பில் இருந்து வராது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அதி உச்ச அதிகாரப் பகிர்வு என்னவென தமது வரைபை முன்வைக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடு எவ்வாறு என்பதை தெளிவாக அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது அதியுச்ச அதிகாரப் பகிர்வு என கருத்தின் உட்பொருள் என்னவென்பது தெரியாது எதையும் எம்மால் தெரிவிக்க முடியாது.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு நான் கருத்துக் கூற முடியாது. அவர் என்ன அடிப்படையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் பொதுவான ஒரு விடயத்தை என்னால் குறிப்பிட முடியும். புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்படவேண்டிய தீர்வு முறைமை தொடர்பில் அரசாங்கம் சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கும்.

இங்கு சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்துவோம் என்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதில் உள்ளடங்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அரசாங்கம் பேச்சு நடத்தும். இதன்போது தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் பேச்சு நடத்தி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகிறோம்.