மஹிந்தவின் காய்நகர்த்தல்களை கண்காணிக்கும் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில் அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை அவசரமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படும் கட்சியுடன் இணைவதற்கும், ஆதரவைத் தெரிவிப்பதற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதிக்கு அறியக்கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் மஹிந்தவின் செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுப்பதற்கும், சுதந்திர முன்னணியிலுள்ள உறுப்பினர்களையும், கட்சிகளையும் அரசாங்கத்தில் தொடர்ந்திருக்கச் செய்வதற்கும் ஜனாதிபதி இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறார்.
நேற்றைய சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பில் தகவல்களை ஜனாதிபதி சிறிசேன பெற்றிருப்பதோடு, அக்கட்சியில் இணைவதற்கு இணக்கம் மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் உறுப்பினர்கள் தொடர்பிலும் தகவல்களைப் பெற்றிருப்பதாக மேலும் அறியமுடிகிறது.