மலையக மக்களின் சிறுநீரகங்கள் திருடப்படுகின்றன!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி வர்த்தகம் தொடர்பாக தற்போது ஏராளமான இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையகத் தமிழ் மக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நடத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெளிநாட்டவர்கள் இங்கு வந்து தனியார் வைத்தியசாலைகளில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மோசடியுடன் ஆறு உள்ளூர் வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தகவல் வெளியிட்டதை அடுத்து சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் ஆறு ஸ்ரீலங்கா வைத்தியர்களுக்கு எதிராக இந்திய பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் குறித்த வைத்தியர்கள் 60 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.