உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தல் (2ம் இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாகேந்திரன் துசாந்த் என்பவரை வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன் சென்று சந்தித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரி முதலமைச்சரின் செயலாளர் சமரசப் பேச்சு நடத்தியுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் இணைப்பு - வடக்கு முதல்வரை அவமதிக்கும் செயலை கண்டித்து தமிழ் இளைஞன் அடையாள உண்ணாவிரதம்
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவமதிக்கும் செயலைக் கண்டித்து, தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக வரணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சுதந்திரமாக செயற்பட விடுமாறு வலியுறுத்தியதுடன் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடந்துனராக கடமையாற்றும் வரணி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந் என்ற இளைஞர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார்.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில், முதல்வர் மீது அவதூறு செய்யாதீர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றாதீர்கள், முதல்வரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள், சங்கிலியன் அரண்மனைக்கு சுற்றுமதில்கள் அமைத்து பேணுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தமது பாரம்பரியங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் தேவைகளை செய்யாமல், மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பாரம்பரியங்களையும், பாரம்பரிய சின்னங்களையும், பாதுகாப்பதுடன், யுத்தத்தினால் குடும்பங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.தமிழ் பாரம்பரிய முறைப்படி, சமாதானத்தினை வலியுறுத்தி, வெள்ளைத் தொப்பி அணிந்து, காந்தியின் வழியில் அந்த இளைஞர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.