ஐ.நா ஆணையாளர் வருவது தேனீர் குடித்து விட்டு செல்வதற்கல்ல - பீரிஸ்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவது , தேனீர் குடித்து விட்டு செல்வதற்கல்ல . சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காகவே மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை மறைத்து கொள்வதற்கு உள் நாட்டில் போலியான பிரசாரங்களை செய்து வருகின்றது. அரசியலமைப்பு விடயத்தில் மேற்குலக நாடுகளின் தேவைகளும் புலிகளின் கொள்கைகளுமே காணப்படுகின்றன. ஆகவே இன்று நாடு பேராபத்தில் சிக்குண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ளது. ஏனெனில் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றினால் பல்வேறு நெருக்கடியானதும் ஆபத்தான சூழலுமே இங்கு உருவாகும்.
அண்மைக்காலங்களை அவதானித்தால் மேற்குலக நாடுகளில் இருந்து பல முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வருகையின் நோக்கம் என்ன ? அதாவது சர்வதேச தரப்புகள் பல்வேறு அழுத்தங்களை தற்போது அரசாங்கத்திற்கு கொடுத்து வருகின்றது. ஜெனீவாவில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள் , உங்களை ஆட்சி மேடைக்கு ஏற்றி எமது கடமையை செய்து விட்டோம் என இலங்கைக்கு வரும் அதிதிகள் கூறுகின்றனர்.
அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை வருகின்றார்.
அவரது வருகையை அண்மையில் இலங்கை வந்த பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும் உள்நாட்டில் வைத்து உறுதி படுத்தினார். ஆகவே ஆணையாளரின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். . அதே போன்று அவர் இலங்கை வருவது வெறுமனே தேனீர் குடித்து விட்டு செல்வதற்கு அல்ல. ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றப்பட்டடுள்ளதா ? இல்லையா ? என்பதை ஆராயவே இவர் வருகின்றார். ஆனால் அரசாங்கம் உண்மைகளை மறைத்து திசை திருப்பும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. வெளிப்படை தன்மையை அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் காண்பிக்க வில்லை.
அரசியல் அமைப்பு என கூறி இழுத்தடிப்புகளை செய்கின்றதே தவிர நாட்டிற்கு உண்மைகளை கூறுவதில்லை. இது கண்டனத்திற்குரிய விடயமாகும். சர்வதேசத்தில் இருந்து செயற்படும் விடுதலை புலிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு பல்வேறு வழிகளில் செயற்படுகின்றனர்.
ஆகவே யுத்தம் முடிந்து விட்டது என அமைதியாக இருந்து விட முடியாது. அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையாக செயற்பட தவறும் பட்சத்தில் அநாவசியமான சந்தேகங்கள் உருவாவதை தடுக்க முடியாது. அரசாங்கத்திற்குள்ளும் ஒற்றுமையற்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் மேலும் நெருக்கடியான சூழலையே வரும் காலங்களில் அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றார்.