மன்னார் ஆயர் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும் நீதிக்காகவும் நாளாந்த உரிமைகளுக்காவும் குரல் கொடுத்து வருபவர்களில் தலையானவராக மன்னார் மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் திகழ்வதாக தமிழ் சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் சிவில் சமூக அமையம், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தனது ஆயர் பணியின் பெரும் பகுதியை யுத்தத்துக்கு மத்தியில் ஆற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, அப்போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக அஞ்சாமல் குரல் கொடுத்த அதேவேளை, அந்நேரத்தில் தனது அருட்பணி மூலமாக பலருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் உதவியும் செய்தார்.
அவருக்கெதிராக கடந்த அரசாங்கம் பயங்கரவாத விசாரணைப்பிரிவு ஊடாக பல விசாரணைகளை முடுக்கி விட்டது. அவரை பயங்கரவாதி என்றும் நாமம் சூட்டியது. அவற்றை பொருட்படுத்தாது தொடர்ந்து மக்கள் பணி ஆற்றினார்.
2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் முன்தோன்றிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை இறுதி யுத்தத்தில் 1 இலட்சத்து 46 ஆயிரத்து 479 தமிழர்களின் நிலை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும் என்ற பதிவொன்றை செய்தார். தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்தில், இந்த பதிவு முதல் மைல்கல்லாக இருந்தது.
ஆயரின் பல தசாப்த காலப்பணி கத்தோலிக்க ஆன்மீக தலைமைத்துவத்துக்கு மட்டுமல்லாது சமூக, அரசியல் தலைமைத்துவத்துக்கும் ஒரு மாபெரும் முன்னுதாரணமாகும்.
ஆயர் காட்டிய முன்னுதாரணத்தை பின்பற்றி வலுவான சமூக தலைவர்கள் எம்மத்தியில் உருவாக வேண்டும் என்பது தமிழ் சமூகத்தின் இன்றைய முக்கிய தேவைகளில் ஒன்றாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.