Breaking News

அயர்லாந்து அணியின் ஆலோசகராக சமிந்த வாஸ்

இலங்கை அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இதில் முக்கியமானவராக திகழ்ந்தவர் சமிந்த வாஸ். தன்னுடைய இடது கை வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியவர்.

இலங்கை அணிக்காக 355 டெஸ்ட் விக்கெட்டுக்களும், 400 ஒருநாள் விக்கெட்டுக்களும் வீழ்த்தி சாதனைப் படைத்தவர். இவர் தனது ஓய்விற்குப்பின் 2012-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றினார். அதன்பின் 2013-ம் ஆண்டில் இருந்த கடந்த ஆண்டு வரை இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார்.

விரைவில் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்படுவதற்காக அயர்லாந்து, சமிந்த வாஸை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது.

யுஏஇ அணிக்கெதிராக பெப்ரவரி 14ம் திகதி மற்றும் 16ம் திகதியில் நடக்கும் டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை அந்த அணியின் ஆலோசகராக வாஸ் செயல்படுவார்.

‘‘அயர்லாந்து அணியின் அதிகாரிகளுடன் நான் கலந்து கொள்ள இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அணியில் ஏராளமான திறமை மற்றும் அனுபவம் உள்ள வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு என்னால் கூடுதலாக வலுசேர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று வாஸ் தெரிவித்துள்ளார்.