காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க அரசு தீர்மானம்!
வடக்கில் யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. வடக்கு அரசியல் வாதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழல் புதிய அரசியலமைப்புக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் பிரதமர் ரணில்விக்கிரசிங்க யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் உரையாற்றும்போது, யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார். எனவே வடக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசின் முடிவென்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் இங்கு மேலும் பதிலளிக்கையில்,
யுத்த காலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதன்போது வடக்கில் யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் நீண்டகாலமாக தமது உறவுகள் காணாமல் போனதால் அவர்களது குடும்பங்களை சார்ந்தோர் பல்வேறு விடயங்களில் சட்டப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
எனவே அவ்வாறான சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அத்துடன் தற்போது வடமாகாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் முக்கியஸ்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை அரசின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதுவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.
வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு புதிய அரசியலமைப்பு தொடர்பிலான முன்னெடுப்புகளுக்கு கிடைப்பது நிச்சயமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில்விக்கிரம சிங்கவும் இணைந்து கடந்த கால ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக இறுதித் தீர்மானத்தை விரைவில் எடுப்பார்கள். திருடர்கள் தப்பிக்க முடியாது. அனைத்து திருடர்களும் தண்டிக்கப்படுவது நிச்சயமாகும்.
இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் எம்மை சந்தித்தன. அவர்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்திப்பார்கள். மஹிந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி புதிய நல்லாட்சியை ஏற்படுத்த சிவில் அமைப்புக்களே பாரிய பங்களிப்பை வழங்கின. எனவே அவர்களது ஆலோசனைகளை பிரதமர் கட்டாயமாக கேட்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் முடிவுற்றாலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் தாமதமாகின. தற்போது அனைத்தும் பூரணமாகியுள்ளன. விரைவில் திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. எனவே சட்டமா அதிபர் பதவிக்கு நேர்மையான திறமையானவர் நியமிக்கப்பட வேண்டும்.
சொலிஸ்டர் ஜெனரல் தொடர்பாகவும் விமர்சனங்கள் உள்ளன. இவையனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்றார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக குறிபபிடுகையில்
மகாநாயக தேரர்களின் ஆதரவு இல்லாமல் பௌத்த குருமார் தொட்பான ஒழுக்க விதி சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமாட்டாது
மகாநாயக தேரர்களின் ஆலோசனைகளில் பிரகாரமே பௌத்த குருமார் தொடர்பான ஒழுக்க விதி சட்டமூலம் அரசால் முன்னெடுக்கப்பட்டது. தற்போது இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.. இதனை மகாநாயகர்களின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்ற மாட்டோம். மகாநாயக தேரர்களுடன் இது தொடர்பான பேச்சுக்கள் நடத்தப்படும். அத்துடன் இதில் திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும்என்றார்.
இந்த ஊடகவியலளார் மாநாட்டில் அமைச்சர் சம்பிக ரணவக, பிரதியமைச்சர்களான வசந்த அலுவிஹாரே, கருணாரத்ன பரணவிதாரன ஆகியோரும் கலந்து கொண்டனர்.