தூக்கு மேடைக்கு அனுப்ப முயற்சி
நாட்டைப் பாதுகாத்த ஸ்ரீலங்காப் படையினரை ஜெனீவா பிரேரணைக்கு அமைய தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு புதிய அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.இரத்தினபுரி - எஹெலியகொடை புளுகஹபிட்டிய ஸ்ரீ சுமண பிரிவென் விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து உயிர் அர்ப்பணிப்புச் செய்து எமது படையினர் பாதுகாத்தனர். ஆனால் இன்று இந்த அரசு அவர்களை நடத்தும் முறை கவலைக்குரியதாகவுள்ளது.
ஜெனீவா பிரேரணைக்கு அமைய எமது படையினரை தூக்கு மேடைக்கு அனுப்பி வைக்க அரசு தயாராகின்றது. எனவே மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். முப்பது வருட யுத்தத்திலிருந்து மீட்டெடுத்த நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.
எமது ஆட்சி மீது விருப்பமில்லாத மக்கள் புதிய ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் புதிய ஆட்சியை ஏற்படுத்திக் கொண்ட மக்கள் இன்று விழிபிதுங்கிப் போயுள்ளனர். நாட்டில் ஸ்திரமில்லா நிலை தலைதூக்கியுள்ளது.
நல்லாட்சி என்ற பெயர் மட்டும் தான் உள்ளது. ஆனால் நாட்டின் பல பிரதேசங்களில் பாதாள உலக கோஷ்டிகளின் ஆட்சி நடக்கின்றது. நாட்டு மக்கள் மத்தியில் மாயையான நல்லாட்சியை காட்டி ஏமாற்றிய அரசாங்கம் தற்போது எவ்வாறு நடந்து கொள்கின்றது. என்பதை மக்கள் தமது கண்ணால் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
அப்பா, அக்கா, தங்கை என்ற பேதம் தெரியாத காட்டு மிராண்டி யுகம் தலைதூக்கியுள்ளது. கொள்ளைகள் கொலைகள், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எமது பௌத்த குருமாரை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் இடம்பெறும் “பாதாள உலக” நிர்வாகத்திற்கு எதிராக பெளத்த குருமார் போராட ஆயத்தமாகின்றனர்.இதனைத் தடுத்து நிறுத்தவே பௌத்த குருமாரை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது - என்றார்.