உள்ளக விசாரணைப்பொறிமுறை வரைவை எமது இணக்கத்துடனேயே முடிவு செய்யவேண்டும் - கூட்டமைப்பு
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்
மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணைப்பொறிமுறை வரைவை எமது இணக்கத்து டனேயே முடிவு செய்யவேண்டுமென வடக்கு, கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆணையை பெற்றதும் பிரதான எதிர்க்கட்சியுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணைப்பொறிமுறை வரைவை எமது இணக்கத்து டனேயே முடிவு செய்யவேண்டுமென வடக்கு, கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆணையை பெற்றதும் பிரதான எதிர்க்கட்சியுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அதீத கவனம் செலுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
அரசாங்கம் குறித்த விடயங்கள் தொடர்பான முழுமையான பொறுப்புக்கூறலை வழங்குவதற்காகவும், இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதற்காகவும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை உறுதி செய்வதற்காகவும் மூவரடங்கிய விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு ஜெனீவாவில் இடம்பெற்ற 30ஆவது மனித உரிமைப்பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்தும் புதிய ஆட்சியாளர்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்பட சர்வதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த விடயங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளின் இணை அனுசரணையுடன் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை இலங்கை அரசாங்கமும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தது.
ஐ.நா. தீர்மானம் அமெரிக்காவினால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கின்றது என்ற கடுமையான விமர்சனங்கள் ஒருபுறமிருக்கையில், அரசாங்கம் இம்மாதம் முதல் ஐ.நா.தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை முன்னெடுப்பதற்காக அனைத்து தரப்பினரின் ஆலோனைகளுடன் உள்ளக பொறிமுறை வரைவை தயார் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
விசேடமாக அதற்கான கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிகளின் பங்கேற்புடன் கூட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, அவற்றின் ஆலோசனைகளும் எழுத்து மூலமாக கோரப்பட்டிருக்கின்றன. அதேநேரம் சிவில் அமைப்புக்களின் பங்களிப்புக்களும் கோரப்படவுள்ளன. இவ்வாறான நிலையில் மார்ச் மாதத்தில் உள்ளக பொறிமுறை தொடர்பான வரைவை இறுதி செய்வதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படுமென அரசாங்கத்தரப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான நிலைமைகளில் பாதிக்கப்பட்ட தரப்பின் பெரும்பான்மை ஆணையை பெற்ற தரப்பாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரைவு உருவாக்கம் தொடர்பில் எவ்வாறான வகிபாகத்தை வழங்கப்போகின்றது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச தரப்பினரிடமும் எம்மிடமும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பொறுப்புக்கூறலை வழங்குவது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை பகிரங்கமாகவே வழங்கியிருக்கின்றது.
ஆகவே, அதனை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் அந்தப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பொறிமுறை வரைவொன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எவ்வாறாயினும், பொறிமுறை குறித்த வரைவானது எமது ஆலோசனைகளையும் அனுமதிகளையும் பெற்ற பின்னரே இறுதி செய்யப்படவேண்டும். அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இவ்விடயம் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதி கிடைப்பதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.