வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதாக இல்லை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அரசாங்கம் உள்ளக விசாரணைப் பொறிமுறை கட்டமைப்பை வடிவமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் இம்மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் விரைவில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகிறது. அரசாங்கம் சிவில் அமைப்புக்களுடனும் பொது அமைப்புக்களுடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்நிலையில் இலங்கை வரவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அரசாங்கத்தின் விசாரணை பொறிமுறை தொடர்பாக அறிவிக்கவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு காணப்படுகின்றது.
எவ்வாறெனினும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அர்ப்பணிப்பு தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இலங்கை வரவுள்ள ஆணையாளர் அல் ஹுசைன் வடமாகாணத்திற்கு விஜயம் செய்வதுடன் அங்கு முதலமைச்சருடன் விசேட சந்திப்பையும் நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக எதிர்பார்க்கப்படும் உள்ளகவிசாரணைப் பொறிமுறையில் வடமாகாணத்தின் பங்களிப்பு மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையிலேயே வடக்கு முதல்வருக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறுமென கூறப்படுகிறது.
இதேவேளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்திற்கான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையெனவும் எனினும் அவர் இலங்கை விஜயம் செய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தேசிய அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வருடம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார்.
இது இவ்வாறிருக்க இலங்கையில் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ளவாறான உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் எதிர்வரும் ஜூன்மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்படவேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் விசாரணை பொறிமுறை தொடர்பான முழுமையான விபரங்கள் எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதுடன் அது தொடல்பில் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்படவேண்டும்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாத அமர்வின் போது இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்களைக் கொண்டு இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசாங்கம் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணையை வழங்கியுள்ள போதிலும் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணை செயற்பாட்டில் உள்ளடக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை. அடிக்கடி இலங்கைக்கு வருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இந்த விடயத்தை வலியுறுத்திச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.