தமிழரசுக் கட்சி நியாயமெனின் 'சிங்கலே' எப்படி தவறாகும்?
இலங்கை தமிழரசு கட்சி என்று ஒரு இனத்தின் அடையாளத்தை மையமாகக் கொண்டு அரசியல் கட்சியொன்றை அமை ப்பது நியாயமென்றால் 'சிங்கலே' என்ற வாசகத்துடன் அமைப்பொன்றை உருவாக் குவது எந்தவகையில் தவறாகும் என பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார்.
இந்த அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாகசெயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதனால் விரக்தியடைந்துள்ள சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து தமது அடையா ளத்தினை பாதுகாப்பதற்காக உருவாக்கப்
பட்ட ஒரு அமைப்பாகவே சிங்கலே அமைப்பை தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிங்கலே அமைப்பு நாடளாவிய ரீதியில் தமது வாசகம் மற்றும் இலச்சினை பொறிக்கப்பட்டஸ்டிக்கர்களை வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் ஒட்டி வருகின்றனர். இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஞானசாரதேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த புதிய அரசாங்கம் மிகவும் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன் நாட்டின் எதிர்காலமும் சவாலுக்குள்ளாகியிருக்கிறது என்பதை தற்போது காணமுடிகிறது.
நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த புலிகள் இயக்கத்தை கடந்த அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான உயிர் தியாகங்களோடு துடைத்தெரிந்தது இதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ்வாறு எமது முப்படையினரும் தமது உயிரை பணயம் வைத்து எமக்கு பெற்றுக்கொடுத்த அமைதிச்சூழலை மீண்டும் குழப்பியடிக்க எவருக்கும் இடமளிக்கக் கூடாது.
இன்று வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் பல அகற்றப்பட்டுள்ளன. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சியோரையும் விடுவிக்க அரசாங்கம் முயன்று வருகிறது.இது மிகவும் பயங்கரமானதும் பாரதூரமானதுமான ஒரு செயற்பாடாகும்.
புலிகள் இயக்கத்தின் ஆயுதரீதியான செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் ஏனைய செயற்பாடுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை.அவை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மிக தெளிவாகவும் துல்லியமாகவும் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதை கருத்திற் கொள்ள வேண்டும். எனவே எமது நாட்டின் உள்ளக விவகாரங்களையும் சர்வதேச நகர்வுகளையும் அதற்கேற்ற வகையில் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் எமது அடையாளம் அழிக்கப்படுவதுடன் மீண்டும் நாட்டில் பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் தலைத்துக்கும் நிலை உருவாகக்கூடும்.
இவ்வாறான நிலையிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யாவருக்கும் உள்ளது.தமது அடையாளத்தை பாதுகாத்து அரசின் தவறான பாதையிலான பயணத்தை தடுப்பதற்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சிங்கலே அமைப்பானது நல்லதொரு செயற்பாடாகும். அதில் எவ்வித தவறும் இல்லை. அவ்வாறான அமைப்பை அமைக்கும் சகல உரிமையும் அவர்களுக்கு உண்டு.
தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் போன்ற பல கட்சிகள் தமது இன, குழு அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இவ்வாறான பெயர்களுக்கு அரசாங்கமும் எந்த வகையிலும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் சிங்கலே என்ற அமைப்பை ஏன் எதிர்க்கும் வகையில் நோக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.