நாடுதிரும்பும் அகதிகளுக்கு இந்திய உதவி
சுயவிருப்பத்துடன் தமிழகத்தில் இருந்து நாடு திரும்புகின்றவர்களுக்கான இந்திய உதவிகளை பெற்றுக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் வீ.சிவஞானசோதி, த ஹிந்து பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.நாளை மறுதினம் தமிழகத்தில் இருந்து 41 ஈழ அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் சுயவிருப்பத்துடன் தமிழகத்தில் உள்ள அகதிகள் நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கான இந்திய உதவிகள் முக்கியமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தமிழ் நாட்டில் இருந்து சுயவிருப்பத்துடன் தாயகம் திரும்புகின்றவர்களின் மாதாந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அகதிகள் விவகார அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் மாதாந்தம் 30 தொடக்கம் 40 பேர் வரையில் தாயகம் திரும்பி இருந்தனர்.எனினும் தற்போது இந்த எண்ணிக்கை 60ஆக அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.