மைத்திரியையும் மஹிந்தவையும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் இணைக்க முயற்சிக்கப்படுவதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இருவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் புதிதாக பேச்சுவார்த்தை சுற்றுக்கள் ஆரம்ப்பிக்கப் பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக இரண்டு தரப்பையும் சேர்ந்த அரசியல்வாதிகள் அல்லாத தரப்பினர் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி சார்பில் அசோக அபேகுணவர்தன தலைமயிலான பிரதிநிதிகள் குழுவினரும் மஹிந்த தரப்பின் சார்பில் புத்திஜீவிகளின் குரல் என்ற அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.ஏற்கனவே இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் வாரத்திலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த தரப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து கொள்வதனால் ஏற்படக்கூடிய நலன்கள் குறித்து பேசப்படவுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த மைத்திரி தரப்பு ஒன்றிணைந்து போட்டியிடுவது மிகவும் அவசியமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.