ஜல்லிக்கட்டு தடையால் தமிழகத்தில் களையிழந்த தைப்பொங்கல் பண்டிகை - தொடரும் போராட்டங்கள்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி தமிழகம் பாலமேட்டில் கிராம மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். கறுப்பு கொடி ஏந்தி பேருந்து நிலையத்தில் இருந்து வாடிவாசல் நோக்கி பேரணியாக சென்றதுடன், ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த சில தினங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை செய்து வந்தவர்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதம், மறியல் போன்றவை நடந்து வருகின்றன. இதில் மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டதை அடுத்து மதுரை மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜல்லிக்கட்டை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள், தொலைபேசிக் கோபுரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், பழனியில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுசெயலாளர் ராம.ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த புறப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று எச்சரித்துள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருப்பதால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களையிழந்து காணப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. பாலமேடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.