மஹிந்தவுக்கு சம்பந்தன் பகிரங்க அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு க்கு நான் ஒரு பகிரங்க அழைப்பை விடுக்கவிரும்புகின்றேன். புதிய அரசியல மைப்பை உருவாக்க அவர் ஒத்துழைக்கவேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பது இந்த நாட்டுக்கும், இலங்கை மக்களுக்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையென்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என்று எதிர்க்கட்சித்தலைவரும் த.தே.கூட் டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது இணைத்தலைவரான இரா.சம்பந்தன் தலைமையுரையாற்றும் போதே மேற்கண்டவாறு பகிரங்க அழைப்பொன்றை விடுத்தார்.
அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழுக்களின் கூட்டம், இணைத்தலைவர்களான இரா. சம்பந்தன் கிழக்குமாகாண முதல் அமைச்சரும் இணைத்தலைவருமான நஸீர் அஹமட், பிரதி அமைச்சரும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கினைப்புக் குழுக்களின் இனைத்தலைவருமான சுஜந்த புஞ்சிநிலம, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான அப்துல்லா மஃறூப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் சம்பந்தன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் ஒரு கோரி்க்கையை முன்வைக்கின்றேன். இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். சூபீட்சம் காணவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாக இருந்தால் இந்நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுடன் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமான காரியமாகும்.
அக்கடமையை நிறைவேற்றுவதில் முன்னாள் ஜனாதிபதியாகிய உங்களுக்கும் ஒரு பொறுப்பிருக்கிறது. நீங்கள் பின்நிற்கக்கூடாது. முன்வந்து உங்கள் கடமையை செய்ய வேண்டுமென மிக அன்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி அடைவதை நாம் எல்லோரும் விரும்புகின்றோம் எனக்கு முன்பேசிய கிழக்குமாகாண முதலமைச்சர் திருமலை மாவட்டத்திலும் கிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் வேலையற்றுக் காணப்படுகின்றார்கள் என்றும் பல்வேறு கஷ்டங்களை அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
சில குடும்பங்களில் மூன்று வேளைகளிலும் உணவு உண்ண வழிவகையில்லாமல் கூட, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். எனக்கு நன்றாக ஞாபகம் வருகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த வேளையில் சிக்கப்பூரும் சுதந்திரம் அடைந்தது. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனிநாடாக சுதந்திரம் பெற்றது. அப்பொழுது சிங்கப்பூரின் முதல் அமைச்சராக இருந்தவர் லீக்குவான்யூன். அவர் தான் அந்த நாட்டை கட்டியெழுப்பியவர்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது அவர் என்ன கூறினாரென்றால் இலங்கையின் அபிவிருத்திப்பாதையில் நான் செல்ல விரும்புகின்றேன் என்று கூறினார். அந்த அளவுக்கு எமது நாடு முன்னேறக் கூடிய பாதையில் சென்று கொண்டிருந்தது. இலங்கை சுதந்திரமடைந்து அபிவிருத்திப்பாதையில் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டுதான் இலங்கையைப் பின்பற்ற வேண்டுமென சிங்கப்பூர் பிரதமர் விரும்பினார். ஆனால் காலப்போக்கில் சிங்கப்பூர் எங்கேயோ சென்று விட்டது. இலங்கை எங்கேயோ நிற்கின்றது.
இன்றைய சிங்கப்பூரின் சாதாரண ஒரு பிரஜையுடைய வருமானம் இலங்கை மக்களின் வருமானத்தை விட 50 மடங்கு அதிகம். இதை புள்ளி விபரங்களுடன் நிரூபிக்க முடியும். அந்தளவுக்கு இலங்கை பின்னடைவு கண்டுள்ளது. பல்வேறு காரணங்கள் நிமித்தமாகும்.
நாட்டில் இன்று பலமுக்கியமான விடயங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கதி தொடரக்கூடாது. சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போல் இலங்கையும் முன்னேற வேண்டும். எங்கள் நாடு அபிவிருத்தி காணவேண்டும். அவ்விதம் நாம் அபிவிருத்தி அடையவேண்டுமாயின் வெளிநாடுகள், வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதன் மூலம் தொழிற்சாலைகளை அமைத்து அபிவிருத்தியை உண்டு பண்ணுவதன் மூலமே எமது மக்களுக்கு ஒரு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்த முடியும். இவற்றை செயல்படுத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் மேற்கூறிய நோக்கங்களை அடைய வேண்டுமாயின் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். இதுவே முதல் விடயமாகும்.
இலங்கையில் இதுவரை உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் எதுவும் இந்நாட்டில் வாழுகின்ற சகல மக்களுடைய அனுமதியுடன், அனுசரணையுடன், ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதல்ல. ஆகவேதான் தற்பொழுது பாராளுமன்றில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அப்பிரேரணையில் பல கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளார்கள். ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஹெல உறுமய போன்ற கட்சிகளின் தலைவர்கள் ஒப்பம் இட்டுள்ளனர். அவர்கள் கோருவது என்னவென்றால் ஒரு புதிய அரசியல் சாசனத்தை இந்நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் ஒத்துழைப்புடனும் உருவாக்க வேண்டுமெனக் கோரியிருக்கின்றார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும். காரணம் இந்தநாட்டின் முன்னேற்றத்துக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை தடையாக இருந்திருக்கின்றது.
ஆகவே அது மாற்றப்பட வேண்டும். அதே போன்றே தேர்தல் முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். நியாயமான தேர்தல் முறை உள்வாங்கப்பட வேண்டும். அரசியல் சாசனரீதியாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென கூறியிருக்கிறார்கள். இது தான் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட முக்கியமான விடயமாகும். எங்கள் எதிர்காலம் இதில்தான் தங்கியுள்ளது. புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அந்த அரசியல் சாசனத்தில் இந்நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் இன, மத, மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக செயற்பட்டு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவார்களாக இருந்தால் அவ்வழியில் செல்வோமாக இருந்தால் இந்த நாடு மிகமிக விரைவில் அபிவிருத்தி அடைய முடியும். பல நாடுகள், பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்து நாட்டில் முதலீடு செய்வார்கள் திருகோணமலையில் முதலீடு செய்வார்கள்.
திருகோணமலையில் பெறுமதிமிக்கதும் உலகப் புகழ் பெற்றதுமான ஒரு துறைமுகம் இருக்கிறது. எனவே முதலீடு செய்வார்கள். இதனால் நாடு முன்னேற்றம் அடையும். நாடு முன்னேற்றமடைந்தால் மக்கள் வாழ்க்கையில் சுபீட்சம் ஏற்படும். ஆனபடியால் எமது மாவட்ட ரீதியான அபிவிருத்தியைப் பற்றி பேசுகின்ற அதே சமயத்தில் நாட்டில் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றுவோமென்று கூறுவதற்காக புதிய அரசியல் சாசனத்தை நாம் உருவாக்க வேண்டும். அதை உருவாக்குவதற்கு நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இவவிடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் கடந்த வாரம் பாராளுமன்றில் உரையாற்றுகின்ற போது தெளிவாக தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து நாட்டில் ஒரு புதுப்பாதையை ஏற்படுத்தி நாடு புதிய பாதையில் செல்லக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அது எமது முதல் கடமையென்பதை இந்த இடத்தில் கூறுவது எனது கடமையென்று நான் கருதுகிறேன். இக்கருமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒத்துழைக்க வேண்டுமென நான் மிகவும் அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் 1 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருகோடி இவ்வருடத்துக்காக 50 லட்சம் சென்றவருட ஒதுக்கீடாக தரப்பட்டுள்ளது. இந்நிதியை நாம் ஒவ்வொருவரும் முறையாக செலவு செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம், மாகாண சபை அமைச்சர்களான கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி,விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம், காணி போக்குவரத்து அமைச்சர் ஆரியபதி கலபதி, சுகாதார அமைச்சர் நஸீர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தரப்பினரும் கலந்து கொண்டனர்.