பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
புதிய பிரார்த்தனைகள், நோக்கங்களைக் கட்டியெழுப்பி வாழ்க்கை குறித்த புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தைக் காணக் கிடைக்கும் பெறுமதியான சந்தர்ப்பமாக புது வருடமொன்றின் ஆரம்பத்தினை தான் கருதுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத,கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய ஒரு நாளாகும்.
அந்த மக்களின் அறுவடைத் திருநாளான இத்தினத்தில் சூரிய வணக்கத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் சூரியததிருநாளாகவும் காணப்படுகிறது. இத்தினத்தில் சூரிய உதயததுடன் தமிழ் மக்களுக்குப் புத்தாண்டு பிறக்கிறது.
சூரிய பகவானினால் வாழ்வாதாரம் வழங்கப்படுவதனை நினைவுபடுத்தி, தமது முதலாவது விளைச்சலை சூரிய பகவானுக்குப் படைப்பதும், விளைச்சலை சிறப்பானதாக மாற்ற உறுதுணையாய் அமைந்த மழை, விலங்கினங்கள் உள்ளடங்கலாக இயற்கையின் அருட்கொடைகளுக்கு நன்றி தெரிவிப்பதும் இத்தினத்தில் இடம்பெறுகிறது.
அனைத்து இலங்கை மக்களினதும் மத, கலாசார பல்வகைத்தன்மையை மதிப்பிட்டுக்கு உட்படுத்தி, கௌரவம் வழங்கி, ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்வதற்குத் தேவையான ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், தைப்பொங்கல் திருநாளானது சமத்துவத்துக்கு கௌரவமளிக்கும், நன்றியுணர்விற்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை முறையை நோக்கி நகர்வதற்கு நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
– பிரதமர் ரணில் விக்ரமசிங்க –