Breaking News

பொங்கல் நிகழ்வுகளில் ஜனாதிபதி இல்லை. பிரதமர் மட்டுமே பங்கேற்பு

யாழ்ப்பாணம், பலாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிவரை ஜனாதிபதியின் வருகை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகைத்தரவில்லை என  தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றுள்ளன.

அதனை தொடர்ந்து தற்போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

நிகழ்வில், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் மற்றும் மகளீர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.