இந்தோனேஷியா தொடர் குண்டுவெடிப்பு - இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்றுவரும் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இன்று காலை நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பொதுமக்களும் ஒரு பொலிஸாரும் இதில் அடங்குகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜகார்த்தாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு அருகிலேயே இந்தக் குண்டு வெடித்துள்ளதாகத் தெரிகிறது. குண்டு வெடித்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், தூதரக அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். ஆனால் இத்தகவலை அரசு தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தேசிய போலீஸ் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆண்டன் சார்லியன் கூறும்போது, "தாக்குதல் நடக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கிடையே இந்தோனேசியாவின் டிவி ஒன் நெட்வொர்க், சிக்னி, சில்பி, குனின்கன் ஆகிய இடங்களில் துருக்கி மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் அருகேயும் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு உயிர்ச்சேதம் அதிகரித்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.