புலிகளிடம் பணம் பெற்று நாட்டை பிரிக்கின்றனர் - பீரிஸ் குற்றச்சாட்டு
புலிகளிடத்தில் அரசாங்கம் பணத்தை பெற்று நாட்டை பிரிக்க முயன்று வருவதாகவும், இதனால் சர்வதேச மட்டத்தில் நாடு பாரிய அவப்பெயரை சந்திக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொது எதிரணியினர் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
‘நாட்டை பிரித்து புலிகளை பலப்படுத்தும் நோக்கத்திலேயே கறுப்புப்பணம் இலங்கையில் குவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வை கேட்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றது. பிரதமர் ரணிலுக்கே இன்று புலிகளின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கின்றது.
கடந்த 9ஆம் திகதி பிரதமர் முன்வைத்த அரசியலமைப்பு திருத்த யோசனை அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாது கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். ஒரு சிலரது தேவைக்காக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் வரப்பிரசாதத்தையும் பிடுங்கி எடுக்கும் வகையில்தான் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதேபோல் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை உள்ளிட்ட எவரது யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆகவே அரசாங்கத்தினுள்ளேயே இன்று இணக்கப்பாடு இல்லாது ஒரு கட்சியின் ஆதிக்கத்தில் தான் ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே ஜனாதிபதியின் நிலைப்பாடும் பிரதமரின் நிலைப்பாடும் எந்த வகையிலும் பொருந்தாத வகையிலேயே காணப்படுகின்றன.
நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளது. பொலிஸ் இராச்சியம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் அடக்குமுறை கையாளப்படுகின்றது. எம்மை அடக்குமுறைகாரர்களாக வர்ணித்தனர். வரலாற்றில் அவ்வாறான தவறுகள் நடந்திருந்தாலும் இந்த ஆட்சியிலும் அது தொடருமானால் அதனை நல்லாட்சியென கூறமுடியாது.
மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அன்று அவ்வாறு இருக்கவில்லை.
பொருளாதார ரீதியில் நாடு பாரிய சிக்கலை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத முதலீட்டாளர்கள் மூலமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை எமது நாட்டுக்கு கொண்டு வருவதாக நிதியமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு வரும் நபர்களின் பெயர், அடையாளம் எவையும் தெரிவிக்கப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வந்ததாகவும் எஞ்சிய ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர் இம்மாதம் இலங்கைக்கு கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசாங்க திறைசேரியாளர்கள் இந்த நிதி தொடர்பில் ஆராயப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். அவ்வாறெனின் இந்த பணம் யாரால் வருகின்றது, ஏன் எவ்வளவு தொகை இலங்கைக்கு வருகின்றது, இது கறுப்புப்பணமா அல்லது புலிகளின் பணமா என்பது தொடர்பில் எவ்வாறு கண்டறிவது?
எனினும் சர்வதேச நாடுகளின் கறுப்புப்பணம்தான் இவ்வாறு வருகின்றது. அதேபோல் புலிகளின் பணத்தையே இவர்கள் எவ்வாறு வாங்கி நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டு சர்வதேச மட்டத்தில் பாரிய அவப்பெயரை சந்திக்கவுள்ளது’ என தெரிவித்தார்.