புலிகளின் கறுப்பு பணமே இலங்கையில் விளையாடுகிறதாம்! மகிந்த தரப்பு குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப்புலிகளின் கறுப்புப்பணமே நிழல் முதலீடுகளாக இலங்கைக்குள் வருகின்றது. நாட்டை பிரித்து புலிகளை பலப்படுத்தும் நோக்கத்திலேயே கறுப்புப்பணம் இலங்கையில் குவிக்கப்படுகின்றது என்று மஹிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வை கேட்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றது. ரணிலுக்கே இன்று புலிகளின் முழுமையான ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அவ்வணியினர் தெரிவித்தனர்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நேற்று (13) புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அந்த அணியினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.இதில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அப்பால் கொண்டுவர பிரதமர் முயற்சித்தும் நேற்று அதை நாம் தடுத்துள்ளோம். அதற்குப் பதிலாக யோசனைகளை முன்வைக்க அரசாங்கத்தின் பக்கம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே பல யோசனைகள் இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை நாட்டில் எந்த பாதிப்பும் வராத வகையில் முன்னெடுக்க வேண்டும் என்பது பலரதும் நிலைப்பாடாக உள்ளது.
குறிப்பாக ஜே.வி.பி மற்றும் அரசாங்கத்தில் பங்குகொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய சிலரும் அதேபோல் பல கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருந்து செயற்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த யோசனை நாட்டை வெகுவாக பாதிக்கும் என்பதை பலரும் விளங்கிக்கொண்டு அதை தடுக்க முன்வந்துள்ளனர்.
எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த யோசனையை நிலையியல் கட்டளைக்கு உள் நிறைவேற்ற இடைப்பட்ட காலத்தில் இருந்து அழுத்தம் கொடுப்போம்.
மேலும் இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்ற வில்லை. வரவுசெலவு திட்டத்திலும் இவர்கள் பல மாற்றங்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டனர். ஆனால் இன்று வரையில் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ள வில்லை. இன்றுவரை பல பொருட்களில் வரிசலுகை நீக்கப்படவில்லை. ஏன் அரசாங்கம் அதன் பண்பில் இருந்து செயற்பட மறுக்கின்றது. நிதி அமைச்சு நித்திரை கொள்கின்றதா? என கேள்வி எழுகின்றது.
நாடாளுமன்றம் இப்போது குறித்த கால எல்லையில் நடைபெறுவதில்லை. கால எல்லையும் சரியாக பகிரப்படுவதில்லை. குறைந்தது ஒரு மாதத்தில் எட்டு தடவைகளாவது நாடாளுமன்றம் கூட வேண்டும். அதையாவது அரசாங்கம் சரியாக செய்யவேண்டும்.
இன்று அனைத்து தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டில் செயற்படும் போது ஐக்கிய தேசியக் கட்சியினர் மட்டும் நாட்டை பிரிக்கும்வகையில் மிகவும் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டை பிரிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியே செயற்படுகின்றது என்றார்.
இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கையில்,
மிகவும் பயங்கரமான நடவடிக்கைகளை அரசாங்கம் கையாள்கின்றது. அதாவது அடையாளம் தெரியாத முதலீட்டாளர்கள் மூலமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்க ளை எமது நாட்டுக்கு கொண்டுவருவதாக நிதியமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவ்வாறு வரும் நபர்களின் பெயர், அடையாளம் எவையும் தெரிவிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஸ்ரீலங்காவிற்கு வந்தது. எஞ்சிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் இம்மாதம் ஸ்ரீலங்காவிற்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அரசாங்க திறைசேரியாளர்கள் இந்த நிதி தொடர்பில் ஆராயப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
அவ்வாறெனின் இந்த பணம் யாரால் வருகின்றது, ஏன், எவ்வளவு தொகை இலங்கைக்குள் வருகின்றது? இது கறுப்புப்பணமா அல்லது புலிகளின் பணமா என்பது தொடர்பில் எவ்வாறு கண்டறிவது?
எனினும் சர்வதேச நாடுகளின் கறுப்புப்பணம் தான் இவ்வாறு வருகின்றது, அதேபோல் புலிகளின் பணத்தையே இவர்கள் எவ்வாறு வாங்கி நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டு சர்வதேச மட்டத்தில் பாரிய அவப்பெயரை சந்திக்கவுள்ளது – என்றார்.