எவ்வாறான அதிகாரங்கள் வேண்டும் என்பதை கூட்டமைப்பு கூறவேண்டும்! மகிந்த அணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கலின் வரையறை என்னவென்பதை வெளியிட வேண்டும் மஹிந்த அணி ஆதரவு எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிந்த காலத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாகவும் ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையர்களாக வாழத் தயாரென்றும் கூறிவருகிறார்.
ஆனால் இலங்கையின் அரசியலமைப்பில் ஒற்றையாட்சியே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை என்பதை விடுத்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதேவேளை, புதிய அரசியலமைப்பிலும் மாகாண சபை முறைமையே ஏற்படுத்தப்படும்.
எனவே இந்த மாகாணசபை அதிகாரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும். அவ் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா? அல்லாவிட்டால் தற்போதுள்ள அதிகாரங்களுடன் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்.
என்னென்ன உரிமைகளை எதிர்பார்க்கின்றனர் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.இடதுசாரிகள் சமஷ்டி முறைமையை ஆதரிக்கின்றனர். ஆனால், ஏகாதிபத்திய வாதிகளின் தேவைக்காக சமஷ்டி முறைமை ஏற்படுத்தப்படுவதை இடதுசாரிகள் எதிர்க்கின்றனர்.
இதில் உடன்பாடு கிடையாது. புதிய அரசியலமைப்பு அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் விதத்தில் அமைய வேண்டும். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் அவர்களை பிரிந்து செல்லும் மனோபாவத்திலிருந்து மீட்க முடியாது. ஆனால் தமிழர்கள் பிரிந்து வாழ்வதற்கான எந்த முயற்சியும் வெற்றிபெற மாட்டாது.
புதிய அரசியலமைப்பின் பின்னணியில் அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது. இதனை இந்தியாவும் விரும்பாது. ஏனென்றால் இலங்கையை பயன்படுத்தி தெற்காசியாவில் தனது பலத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்றது என்றார்.