Breaking News

வித்தியா கொலை வழக்கு விரைவில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் விரைவில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெறும் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நீதியமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மாணவி வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்,

மாணவி வித்தியா படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை தற்சயம் இறுதித் தருணத்தை அடைந்திருக்கிறது.

இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கான அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை நடத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் விடுக்கும்.

இதனை செய்வதாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். இது தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வழக்கின் தன்மை மற்றும் பாரதூரத்தை வைத்து, பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் முன்வைப்பதற்கான கடப்பாடு சட்டமா அதிபருக்கு உள்ளது.

எனினும் இதற்கான நியமனங்கள் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கே உள்ளது – என்றார்.