விசாரணைகளை தொடங்கியது இலங்கை கிரிக்கெட் வாரியம்
நியூசிலாந்தில் இலங்கை வீரர்களின் மோசமான நடத்தை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இதில் இலங்கை அணி ஒருநாள் தொடரை 3-1 எனவும், டி20 தொடரை 2-0 எனவும் இழந்தது.
இந்நிலையில் அங்கு இலங்கை அணி வீரர்களின் நடத்தை தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.அவர்கள் அங்கு விடிய விடிய மதுவிருந்தில் குடித்து விட்டு, தங்கள் அணி வீரர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இது பற்றி விளையாட்டு துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகர கூறுகையில், ”இலங்கை வீரர்களின் நடத்தை பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. வீரர்கள் அதிகாலை 3, 4 மணி வரை குடித்து கும்மாளம் அடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது வீரர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிடையே கைகலப்பும் நடந்துள்ளது.அவர்கள் மதுவிருந்தில் கலந்து கொண்ட அனைத்து புகைப்படங்களையும் நான் கொடுத்துள்ளேன்.
முதலில் ஒழுக்கத்தில் அக்கறை வேண்டும். ஒழுக்கம் இல்லாத இடத்தில் எதுவும் சிறப்பாக அமையாது. அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக எனக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்“ என்றும் கூறியுள்ளார்.