உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? 12 மாதங்களில் தீர்வுகளை வழங்குவோம்!
காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை இன்னும் 12 மாதங்களினால் அரசாங்கம் நீடித்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு நாங்கள் நிச்சயம் தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம். அதற்கேற்றவகையில் தேவையான திட்டங்கள் எம்மிடம் உள்ளன என்று ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
நாங்கள் திருகோணமலையில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அமர்வுகளை நடத்தும்போது அங்கு இருப்பதாக கூறப்படும் இரகசிய முகாம்களைப் பார்வையிட இருக்கின்றோம். இது தொடர்பில் நீண்ட விசாரணையை மேற்கொள்வதற்கும் எமது ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது எனவும் பரணகம குறிப்பிட்டார்.
மேலும் காணாமல்போனோர் தொடர்பில் எம்மால் நிச்சயம் தீர்வை வழங்க முடியும். அதாவது காணாமல்போனோர் இறந்துவிட்டனரா? அல்லது உயிரோடு இருக்கின்றனரா? அவர்கள் எங்கு வைத்து யாரால் அழைத்து செல்லப்பட்டனர் ? போன்ற விபரங்களை நிச்சயம் நாங்கள் 12 மாதங்களில் காணாமல்போனோரின் உறவுகளுக்கு பெற்றுக்கொடுப்போம் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம சுட்டிக்காட்டிக்காட்டினார்.
காணாமல்போனோர் தொடர்பான விவகாரம் நாட்டில் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பது குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மெக்ஸ்வல் பரணமக இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்:-
காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் எமது செற்பாட்டுக்காலத்தை மேஞலும் 12 மாதங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
அதன்படி இன்னும் இரண்டு வாரங்களில் காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலம் நீடிக்கப்படுமென எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதி தற்போது அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பாரிய வேலைப்பளுவுடன் இருக்கின்றார். எனவே அவர் இன்னும் சில தினங்களில் எமது ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை நீடிப்பதற்கான ஆணையை வழங்குவார்.
ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலம் நீடிக்கப்பட்டவுடன் முதலில் யாழ்ப்பாணத்தில் விசாரணை அமர்வுகளை நடத்தவிருக்கின்றோம். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்திலும், விசாரணை அமர்வுகளை நடத்தவிருக்கிறோம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விசாரணை அமர்வுகளை நடத்தும்போது திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டதாக கூறப்படும் இரகசிய முகாம் குறித்தும் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கும் எதிர்பார்க்கிறோம்.
விசேடமாக நாங்கள் குறித்த இரகசிய முகாம் எனக்கூறப்படும் முகாமுக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்கின்றோம். அத்துடன் எமது விசாரணையாளர்களையும் அங்கு அழைத்து சென்று நிலைமைகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளோம். எமது ஆணைக்குழுவிற்கு இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறைப்பாடு செய்தால் நாம் அங்கு செல்வது இலகுவாக இருக்கும். இல்லாவிடினும் நாங்கள் அந்த முகாமுக்க செல்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளை இரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் கூறியுள்ளதாக அறிகின்றோம். ஆனால் ஒரு விடயத்தை இந்த இடத்தில் மிகவும் தெளிவாக கூறுகிறோம்.
அதாவது காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை இன்னும் 12 மாதங்களினால் அரசாங்கம் நீடிக்கும் பட்சத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல்போனோர் பிரச்சினைகளுக்கு நாங்கள் நிச்சயம் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம். அதற்கேற்றவகையில் தேவையான திட்டங்கள் எம்மிடம் உள்ளன என்பதையும் இந்த இடத்தில் தெரிவிக்கிறோம்.
அதுமட்டுமன்றி காணாமல்போனோர் தொடர்பில் எம்மால் நிச்சயம் தீர்வை வழங்க முடியும். அதாவது காணாமல்போனோர் விவகாரத்தில் பல்வேறு மட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வுகளை வழங்க முடியும்.
அதாவது காணாமல்போனவர்கள், இறந்துவிட்டனரா? அல்லது உயிரோடு இருக்கின்றனரா? என்பதை எம்மால் கூறமுடியும். ஒருவேளை இந்த இரண்டு முடிவுகளுக்கும் வர முடியாவிடின் அது தொடர்பில் மேலதிகமாக செயற்படுவதற்கான தேவையையும் நாம் முன்வைக்கலாம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட விடயத்தை நாங்கள் நிச்சயமாக கூறமுடியும். அதாவது காணாமல் போனவர்கள் எங்கு வைத்து யாரால் அழைத்து செல்லப்பட்டனர் என்ற விபரங்களை நிச்சயம் நாங்கள் 12 மாதங்களில் காணாமல்போனோரின் உறவுகளுக்கு பெற்றுக்கொடுப்போம் .
அத்துடன் கடத்தப்பட்டவர்கள் எங்கு வைத்து கடத்தப்பட்டார்கள், யாரால் கடத்தப்பட்டார்கள் என்ற விபரங்களைக் கூட எம்மால் 12 மாதங்களில் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் நாங்கள் இவ்வாறு காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நோக்கில் எமது ஆணைக்குழுவிடம் விசாரணையாளர்களும் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் சிறந்தமுறையில் விசாரணைகளை மேற்கொண்டு தீர்வுகளை வழங்குவதற்கு எமக்கு துணை நிற்பார்கள் என்றார்.
கேள்வி: காணாமல் போனோர் தொடர்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்திற்கும் தீர்வு வழங்க முடியுமா?
பதில்:- 12 மாத காலத்தில் அனைத்து முறைப்பாடுகளுக்கும் நாங்கள் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம். ஆனால் தீர்வுகள் பல்வேறு மட்டங்களில் அமையும் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.
கடந்த ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் இந்த பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகளை இரத்து செய்யவேண்டுமென கோரப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கைக்கு கடந்த வருடம் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகளும் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட வேண்டுமென கூறியிருந்தனர்.
இது இவ்வாறிருக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கவலையுடன் தெரிவிப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.