Breaking News

நேதாஜி குறித்த 100 ஆவணங்களை வெளியிட்டார் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100
ஆவணங்களின் டிஜிட்டல் நகல்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டார்.

நேதாஜியின் 119-வது பிறந்தநாளை ஒட்டி இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 33 ஆவணங்களை தேசிய காப்பகத்துக்கு பிரதமர் அலுவலகம் வழங்கியது. எஞ்சியவை, நேதாஜி தொடர்பாக இந்திய அரசுக்கும் ரஷ்யா மற்றும் ஜப்பான் அரசாங்களுக்கும் இடையேயான ஆலோசனைகள் தொடர்பானவை.

கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் விரைவில் பொதுமக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து அந்த ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் தேசிய ஆவண காப்பகம் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் நேதாஜியின் பிறந்ததினத்தை முன்னிட்டு, இந்த ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

மோடி வெளியிட்ட டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 100 ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு தேசிய ஆவண காப்பகம் வைத்தது. மாதம் தோறும் 25 ஆவணங்களை வெளியிடவும் தேசிய ஆவண காப்பகம் முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேதாஜியின் உறவினர்கள் 12 பேர் கலந்து கொண்டனர்.

இன்று வெளியிடப்பட்ட ஆவணங்களில் ஒன்றில், நேதாஜியின் மனைவி மற்றும் மகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்பட்டதும் அத்தொகை நேதாஜியின் மகள் அனிதா போஸ் திருமணத்துக்குப் பின்னர் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறவினர் கோரிக்கை:

போஸின் உறவினரான அர்தேனு, நேதாஜி தொடர்பாக இன்னும் பல தகவல்களை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என கோரியுள்ளார். குறிப்பாக, நேதாஜி தொடர்பாக கூடுதல் தகவல்களை ரஷ்யாவிடமிருந்து பெற முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், நேதாஜியின் சாம்பலில் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அத்தகைய பரிசோதனையால் எவ்வித பலனும் கிட்டாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.