தாஜூதீன் கொலையின் CCTV காட்சிப் பதிவுகள் கிடைத்துள்ளன!- ராஜித்த
றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலைக் காட்சிகள் பதிவாகியுள்ள CCTV காட்சிப் பதிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த காட்சிகளில் வசீம் தாஜூதீன் C.R & F.C விளையாட்டுத் திடலில் இருந்து வெளியேறும் காட்சிகளும், அதன்பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டு, அடித்து, கொலை செய்யும் வரையில் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் குறித்த காட்சிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தக் கொலையுடன் அரசியல் பிரமுகரின் குடும்பம் தொடர்புபட்டிருப்பதாக உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கிடைத்துள்ள CCTV காட்சிப் பதிவுகளில் குறித்த அரசியல் பிரமுகரின் குடும்பத்தில் உள்ளவர்களின் காட்சியும் இருப்பதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வசீம் தாஜூதீனின் மரணம், கொலை தான் என்று இதுகுறித்து பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.