மன்னார் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புகள் - வெளிநாட்டில் பரிசோதிக்க அனுமதி
இலங்கையின் வடமேற்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை வெளிநாடொன்றில் பரிசோதனை செய்வதற்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது.
தேவார பாடல்பெற்ற திருத்தலமாகிய திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடிநீர்க் குழாய் பதிப்பதற்காக வீதியோரத்தில் நிலத்தை தோண்டியபோது அங்கு மனித எலும்புகள் முதலில் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து, மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அந்தப் பகுதியை அகழ்ந்தபோது, அங்கு 88 பேருக்குரிய எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர், முற்காலத்தில் வாழ்ந்த கிராமவாசிகள் இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்திய புதைகுழி இருந்த இடத்திலிருந்தே இந்த மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆயினும், திருக்கேதீஸ்வரம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் அந்தப் பிரதேசத்தில் காணாமல் போயிருந்தவர்களே கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பொது மக்கள் தரப்பில் நீதிமன்றத்ததில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்தே அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.