தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் - மாவை நம்பிக்கை
தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றும் அவர்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செவிசாய்க்க வேண்டும் என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வலி.கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் தொடர்ச்சியாக அங்கீகாரம் அளித்துள்ளார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் சில விடயங்களை நாம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம்.
அதாவது, இனப்பிரச்சினைக்கு தீர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு மக்கள் சொந்த நிலங்களில் மீளக்குடியமர வேண்டும் மற்றும் கைதிகள் விடுதலை என்பனவற்றை முக்கியமாக கூறியுள்ளோம்.
இம்முறையும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தொடர்ச்சியாகப் அங்கீகாரத்தை அளித்துள்ளார்கள். எனவே அவர்களுக்காக நாம் அயராது பாடுபடுவோம். அதற்கு ஆதரவாக ஜனநாயக ரீதியாக யார் எங்களுடன் பேச வேண்டுமானாலும் பேசலாம்.
நாங்களும் எங்களுடைய தேவைகளை அறிந்து யாரின் ஆலோசனைகளை பெற வேண்டுமோ அவர்களுடன் பேச நாமும் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார்.