காணாமல்போனோர் தொடர்பான விசாரணை யாழில் இன்று ஆரம்பம்
காணாமல்போனோர் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி ஆணைக்குழுவானது இன்றிலிருந்து எதிர்வரும் 16ஆம் திகதி புதன்கிழமைவரை யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த காணாமல் போனோர் தொடர்பான விசாரணையை யாழ்.மாவட்ட செயலகத்திலும் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாண பிரதேச செயலகத்தை சேர்ந்தவர்களது விசாரணைகளை யாழ்.மாவட்ட செயலகத்திலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி, மருதங்கேணி பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வடமராட்சி வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்காக பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் மறுநாள் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தை சேர்ந்தவர்களுக்காக சங்கானை பிரதேச செயலகத்திலும் விசாரணைகளை நடத்தவுள்ளது.
மேலும் இறுதி நாளான 16ஆம் திகதி புதன்கிழமை உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களுக்காக தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலும் விசாரணைகள் நடைபெறவுள்ளன.
இவ் விசாரணைகளின்போது அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் இருந்து ஆயிரத்து 620 பேர் சாட்சியமளிக்கவுள்ளதுடன் மேலும் 300 பேர் வரை மேலதிகமாக பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை முற்றாகப் புறக்கணிக்கப் போவதாக வடக்கு, கிழக்கு காணாமல் போனோரின் உறவுகள் தீர்மானம் எடுத்திருந்ததுடன் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஒன்றுகூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். அத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் விசாரணை இடம்பெறும் இடங்களுக்கு வெளியே நின்று கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.