ஊடகங்களையும் முடக்கியது சென்னைப் பெருவெள்ளம்
சென்னையில் ஏற்பட்டள்ள பெருவெள்ளத்தினால், இந்தியாவின் பழம்பெரும் நாளிதழான ‘தி ஹிந்து’ 137 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று வெளிவரவில்லை. அத்துடன் ஜெயா மற்றும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிகளும் சேவையை நிறுத்தியுள்ளன.
சென்னையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தினால், 137 ஆண்டு வரலாற்றைக் கொண்ட ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் தனது வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய பதிப்பை வெளியிடவில்லை.
1878ஆம் ஆண்டு தொடக்கம் சென்னையில் இருந்து வெளிவருகிறது ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ்.இதன் ஆசிரியர் பீடம் சென்னை நகருக்குள் அமைந்திருக்கின்ற அதேவேளை, சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மறைமலை நகர் பகுதியிலேயே அச்சகத்தைக் கொண்டுள்ளது.
‘தி ஹிந்து’ நாளிதழ் பணியாளர்கள், மறைமலை நகரிலுள்ள அச்சகத்துக்கு செல்ல முடியாதளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், நேற்றைய பதிப்பை ‘தி ஹிந்து’ வெளியிடவில்லை.இது 137 ஆண்டு வரலாற்றில் முதல் சம்பவம் என்று ‘தி ஹிந்து’ நாளிதழின் வெளியீட்டாளர் முரளி தெரிவித்துள்ளார்.
சென்னை, வேலூர், புதுச்சேரி, திருப்பதி பதிப்புகளை வெளியிட முடியவில்லை என்று ‘தி ஹிந்து’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.அதேவேளை, ஜெயா தொலைக்காட்சி, மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையங்களுக்குள்ளேயும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தொலைக்காட்சி சேவைகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.