Breaking News

அரசியல் கைதிகள் விவகாரம் - சமரவீரவின் கேள்விக்கு சுவாமிநாதன் பதில்

விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டமைக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லவென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல கேள்வி பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, புலிகளுடன் இணைந்து தீவிரவாத செயற்படுகளில் ஈடுபட்டவர்களை அரசியல் கைதிகளாக கருத முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அவ்வாறான ஒரு பகுதி இல்லையென தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில், குற்றமிழைத்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள கைதிகள் 34 பேரும், சந்தேகநபர்களாக 136 பேரும், மேன்முறையீட்டு கைதிகள் 10 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பத்து மாதங்களாக பிணை வழங்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்கள் மற்றும் கைதிகளுள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானவர்கள் 19 பேர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிணையில் விடுதலையானவர்கள் 67 பேர் எனவும், 42 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் பொருட்டு புனர்வாழ் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.