அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் இன்று கொழும்பு வருகிறார்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராக நியமனம் பெறவுள்ளவரும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகராகப் பணியாற்றுபவருமான தூதுவர் தோமஸ் சானொன் இலங்கைக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பங்களாதேசுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் கொழும்பு வரவுள்ள அவர், வரும் 16ஆம் நாள் வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இவருடன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர் மான்பிரீத் சிங் ஆனந்தும், கொழும்பு வரவுள்ளார். இவர்கள் இன்று மாலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
அத்துடன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் தோமஸ் சானொன் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்கிழக்கு மாகாணத்தில் யுஎஸ் எயிட் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் திட்டங்களையும் அவர் நேரில் பார்வையிடவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கான அமெரிக்காவின் ஆதரவை தூதுவர் தோமஸ் சானொன் மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகராகப் பணியாற்றும் தூதுவர் தோமஸ் சானொனின் பெயர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.