Breaking News

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுவது ஏன் ?

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிக்கல்கள் காரணமாக
உறுதியளித்தபடி, அரசாங்கத்தினால் அவர்களை விடுதலை செய்ய முடியாதிருப்பதாகவும் கூறப்படுகின்றது. மறு புறத்தில் அரசியல் குழப்பம் காரணமாகவே அவர்களின் விடுதலை தாமதமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் நிலைமை அதுவல்ல. நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வருகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையானது, உண்மையிலேயே, அரசியல்வாதிகளினாலும், அதிகாரிகளினாலும் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டியுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்பது அரசியல் விடயமா, அல்லது சட்டம் சார்ந்த விடயமா என்பது முதலில் தெளிவாகவில்லை. அரசியல் ரீதியாக அல்லது சட்டரீதியாக நிலையான ஒரு நிலைப்பாட்டில் துணிந்து நின்று இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு இதுவே முக்கிய காரணமாகத் தெளிவாகத் தெரிகின்றது. முதலில் அரசியல் கைதிகளை அரசியல் கைதிகளாக ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் மறுத்திருந்தது. அதேபோன்று சட்டமா அதிபர் திணைக்களமும் மறுத்திருந்தது. இதனால்தான் அரசியல் கைதிகள் என்று எவரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை. குற்றம் செய்தவர்கள் அதாவது பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது.

இப்போதும் அவ்வாறே அரச தரப்பினர் கூறி வருகின்றார்கள். அரசாங்கத்தினால் பயங்கரவாதம் என்று சுட்டிக்காட்டப்படுகின்ற அரசியல் உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் இளைஞர்களையும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களையும் கைது செய்து தண்டிப்பதற்காகவே, பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் நடைமுறையில் கொண்டு வரப்பட்டன. இந்த இரண்டு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்வதிலேயே இழுபறி நிலைமை காணப்படுகின்றது.

அவர்களை விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல்கள் மற்றும் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் காரணம் கூறப்படுகின்றது. ஆயினும், தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை அரசாங்கம் கையாள்கின்ற முறையை நோக்கும்போது சட்டச்சிக்கல்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமல்ல, சட்டத்தையும் அரசியலையும் கலந்து கைதிகளின் விடயத்தை அரசியல் நோக்கத்திற்காக, வேண்டுமென்றே குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

நாட்டில் உள்ள சட்டங்கள் எழுத்தில் தெளிவாக இருக்கின்றன. குற்றம் செய்கின்ற ஒருவரைக் கைது செய்வது, குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வது, விசாரணைக்காக அவர்களைத் தடுத்து வைத்திருப்பது, விசாரணைகளில் குற்றம் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் என்னென்ன வகைகளில் தண்டனை வழங்குவது என்பது பற்றிய பரிந்துரைகள், வழிகாட்டல்கள் எல்லாமே சட்டங்களில் சட்ட விதிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, சட்ட ரீதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை அணுகியிருப்பார்களேயானால், அவர்களுக்கான தண்டனை அல்லது அவர்களுடைய விடுதலை இப்போது காணப்படுகின்ற அளவுக்கு சிக்கல்கள் மிகுந்ததாக மாறியிருக்கமாட்டாது. ஏனென்றால் குற்றம் செய்தவர்களுக்கே தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அபரிமிதமான அதிகாரங்களை வழங்கியுள்ள மிகமோசமான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் கூட, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற ஒருவரை ஒன்றரை வருடங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யலாம் என்றே கூறுகின்றது.

அந்தக் காலப்பகுதியில் அந்த சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆதாரங்களைப் பெறமுடியாவிட்டால், அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருக்க முடியும் என்று சட்டம் கூறவில்லை. அவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட புலனாய்வு அதிகாரிகளின் பொறுப்பில் இருந்து நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டும் என்பதே நடைமுறையாகும். அங்கேயும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மேல் சந்தேக நபர்களைத் தடுத்து வைத்திருக்க முடியாது.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அல்லது விடுதலை செய்ய வேண்டும். இதுவே சட்ட நடைமுறையாகக் காணப்படுகின்றது. ஆனால், நீதி நடைமுறைகளுக்கு மாறாக அரசியல் ரீதியான நோக்கத்திற்காக சட்டமா அதிபருடைய அதிகார பலத்தைப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகள், பிணையோ, விடுதலையோ இன்றி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலைமையையே பார்க்கக் கூடியதாக உள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று சர்வதேச மட்டத்தில் நிலைமைகள் சூடு பிடித்திருந்த 2014 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் அரசாங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டிருந்தவர்களினால், தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக, விசேடமாக இரண்டு மேல் நீதிமன்றங்களை அமைத்துச் செயற்படுவோம் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

அதற்கு அமைவாக, அனுராதபுரத்திலும், மன்னாரிலும் இரண்டு விசேட மேல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இந்த நீதிமன்றங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்கென்று சிங்களவர்களான நீதிபதிகளையே அரசாங்கம் நியமித்திருந்தது. இந்த நீதிபதிகளுக்கு தமிழ் தெரியாது. வழக்குகள் விசாரணை செய்யப்படும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் மொழிபெயர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டிருந்தது. இதற்கென நியமிக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பாளர்கள் கடமைக்கு சமுகமளிக்காத தினங்களில் இந்த வழக்குகள் நடைபெறமாட்டாது, வேறு திகதிக்கு அந்த வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனால். வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் ஐ.நா.வில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு முரணான வகையில் மிகவும் தாமதமடைந்தன.

அனுராதபுரத்தில் நிறுவப்பட்டிருந்த விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளில் எல்லாம் சிங்கள சட்டத்தரணிகளே அதிக அளவில் ஆஜராகி வந்தார்கள். சிங்கள மொழி தெரியாத வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளும் உறவினர்களும் தமக்குரிய தமிழ் மொழி தெரிந்த சட்டத்தரணிகளை அங்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியாத மிகவும் சிக்கலான நிலைமை ஏற்பட்டிருந்தது. தாங்களாகவே சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து கொள்ள முடியாத கைதிகளின் சார்பில் வாதாடுவதற்கு நீதிமன்றமே சட்டத்தரணி ஒருவரை நியமிக்கும். இவ்வாறு நியமிக்கப்படுபவர்களும் அனுராதபுரத்தில் தமிழர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களும் சிங்களவர்களாகவே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக புதிதாக சத்தியப் பிரமாணம் செய்து வெளியேறிய இளம் சட்டத்தரணிகளாகவே இருப்பார்கள்.

இவ்வாறு நியமிக்கப்படுகின்ற சட்டத்தரணி ஒருவருக்கு, ஒரு வழக்குக்கு முன்னர் ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அது ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் அந்தக் கொடுப்பனவு வழக்கு விசாரணைகள் நடைபெற்று முடிவுக்கு வந்ததன் பின்பே அந்த சட்டத்தரணிக்கு வழங்கப்படும். மறுபுறத்தில், சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி சாதுரியமாகவும் திறமையாகவும் வாதாட வேண்டிய இந்த வழக்குகளில் அந்த இளம் சட்டத்தரணிகள் ஒருபோதும் அரசியல் கைதி வழக்கில் வெற்றி பெறத்தக்க வகையில் செயற்பட முடியாதிருக்கும். அதற்குத் தேவையான சட்டப் பயிற்சியும் அனுபவமும் அவர்களிடம் இல்லாதிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். ஆயினும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளில் ஈடுபடுவதன் மூலம் சட்ட நுணுக்கங்களையும், வாதத் திறமைகளையும் அனுபவ ரீதியாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த வழக்குகளில் இளம் சட்டத்தரணிகள் விருப்பத்தோடு வாதாடுவதற்கு முன்வருவார்கள்.

இதுவே அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திலும் சரி, கொழும்பு நீதிமன்றங்களிலும் சரி இடம்பெற்று வருகின்ற நடைமுறையாகும். மன்னாரில் நிறுவப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு, தமிழ் சட்டத்தரணிகள் இருந்தாலும், அனுராதபுரத்தைப் போலவே கைதிகளின் உறவினர்கள் மிகுந்த பணம் மற்றும் நேரம் என்பவற்றைச் செலவு செய்து மன்னாருக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதேநேரத்தில் தகுதியான சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதானால், அனுராதபுரத்திற்கு கொழும்பில் இருந்தும், மன்னாருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்தும் சட்டத்தரணிகளை அழைத்து வரவேண்டும். அதற்குத் தேவையான பணவசதி இல்லாத காரணத்தினால், பெரும்பான்மையான கைதிகள் நீதிமன்றங்கள் நியமிக்கின்ற இளம் சட்டத்தரணிகளிலேயே தங்கியிருக்க நேர்ந்திருக்கின்றது. இதுவும் வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ஜெனிவாவில் அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் அனுராதபுரத்திலும், மன்னாரிலும் நிறுவப்பட்ட விசேட மேல் நீதிமன்றங்களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் வழக்குகள் துரிதமாக விசாரணை செய்யப்படவில்லை என்றே கூற வேண்டும். இந்தப் பின்னணியில்தான் இப்போது கொழும்பில் மேலும் ஒரு புதிய விசேட மேல் நீதிமன்றம் ஒன்று பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக கொழும்பில் நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் வேதாளம் மரத்தில் ஏறிய கதையாக இந்தப் புதிய நீதிமன்றத்திற்கும் சிங்களவராகிய ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரே நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இந்த நீதிமன்றமும், தமிழ்ப்பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ்க் கைதிகளின் வழக்குகளை தமிழ்ப்பிரதேசத்திற்கு வெளியில் கொழும்பில் நிறுவப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்சினை, கைதிகளின் உறவினர்கள், பெரும் செலவும் அதிக நேரச் செலவும் கொண்ட நீண்ட தூரப் பிரயாணம் செய்ய வேண்டிய பிரச்சினை என்பவற்றுடன் அவர்களின் வசதிக்கேற்ற வகையில் சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து கொள்ள முடியாத கஷ்ட நிலைமையும் இந்தப் புதிய நீதிமன்றச் செயற்பாட்டில் இருக்கத்தான் போகின்றது. இந்த விசேட நீதிமன்றத்தின் ஊடாக வழக்குகள் துரிதமாக விசாரணை செய்யப்படுமா என்பது ஐயப்பாட்டிற்கு உரியதாகவே உள்ளது.

மொத்தத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்யப் போகின்றோம் எனக்கூறி, அரசாங்கங்களினால் அமைக்கப்படுகின்ற விசேட நீதிமன்றங்கள் கைதிகளினதும், அவர்களின் உறவினர்களினதும் வழக்காடும் உரிமைகளை கேள்விக்குட்படுத்துவதற்கே வழி வகுத்திருக்கின்றன. இது தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பயன்தருகின்ற நடவடிக்கையாகத் தென்படவில்லை.

கைதிகளினதும், அவர்களின் உறவினர்களினதும் வழக்காடும் நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் வழி சமைத்திருப்பதாகக் கூறமுடியாதுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டுமானால், உண்மையாகவே, அவ்வாறான அக்கறை அரசாங்கத்திற்கு இருக்குமேயானால், இந்த விசேட நீதிமன்றங்களை, தமிழ்ப்பகுதிகளில் நிறுவியிருக்கலாம் அல்லவா? அது மட்டுமல்ல. அந்த நீதிமன்றங்களில் தமிழ் நீதிபதிகளை நியமித்திருக்கலாந்தானே, அரசாங்கம் அதனை ஏன் செய்யவில்லை? இதிலிருந்து, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்தவோ அல்லது அவர்களை விடுதலை செய்யவோ அரசாங்கம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் சட்டரீதியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்று கூறுவதற்கு இடமில்லை. பயங்கரவாதம் என்று அரசாங்கங்கள் குறிப்பிட்டு வந்த, அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டச் செயற்பாடுகளில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களையும், அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்களையும், அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றைப் பயன்படுத்தியே கையாண்டு வந்துள்ளது.

சாதாரண குற்றவியல் சட்டங்களிலும் பார்க்க, இராணுவத்திற்கும், பொலிசாருக்கும் அளவற்ற அதிகாரங்களையும், ஒரு வகையில் குற்றச் செயல்களுக்குத் தண்டனை பெறுவதில் இருந்து அவர்களுக்கு விலக்களிக்கத்தக்க வகையிலான சலுகைகளையும் இந்தச் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன. குறிப்பாக, வெறும் சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்து விசாரணை செய்வதற்கும், அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கும் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் அந்தச் சட்டங்களில் வழி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தச் சட்டங்கள் பாரதூரமானவைகளாகக் கருதப்படுகின்ற போதிலும், இந்தச் சட்டங்களின் மூலம் குற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒருவருக்கு ஆகக் கூடியது 20 வருடச் சிறைத் தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்குவதற்கே வழி செய்யப்பட்டிருக்கின்றது. பயங்கரவாதச் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருந்தார், பயங்கரவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தார் அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகளின் மூலம் ஒருவரை அல்லது பலரைக் கொலை செய்திருக்கின்றார் என்று ஏதாவது ஒரு வகையில் ஒருவர் குற்றம் செய்திருக்கின்றார் என்று ஆதாரங்களுடன் நிரூபித்தால், இந்தச் சட்டங்களின் கீழ் அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும்.

கொலைகள் நிகழ்ந்திருந்தாலும் கூட, அரசாங்கத் தரப்பினரும், இராணுவத்தினரும் குற்றம்சாட்டுவதைப் போன்று சிறுகுழந்தைகள், வயோதிபர் பெண்கள் போன்றவர்களை குண்டுத் தாக்குதல்களை நடத்தி, பயங்கரமாகக் கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட, அந்தக் குற்றவாளிக்கு இந்தச் சட்டங்களின் கீழ் சிறைத் தண்டனையையே அதிகபட்ச தண்டனையாக வழங்க முடியும். இதுதான் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு தண்டனை வழங்குவதற்காகச் செய்யப்பட்டுள்ள பரிந்துரையாகும்.

ஆனால், சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலைக்குற்றம் புரிந்தவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வழி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோன்று போதை வஸ்து சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்குவதற்கு சாதாரண குற்றவியல் சட்டம் பரிந்துரைத்திருக்கின்றது. மரண தண்டனை என்பது பாரதூரமானது. அதியுச்ச தண்டனையாகும். அத்தகைய குற்றங்களைச் செய்தவர்களைக் கைது செய்து விசாரணை செய்ததன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிணை வழங்கப்படுகின்றது. ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வெறும் சிறைத் தண்டனையைப் பெறப்போகின்ற சந்தேக நபருக்கு அல்லது எதிரிக்கு பிணை வழங்க முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் பிடிவாதம் பிடிக்கின்றது. இது இந்த நாட்டின் சட்ட நடைமுறைகளில் காணப்படுகின்ற மிகவும் வேடிக்கையான நிலைமையாகும். அதேநேரத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு அதிக வேதனை தருகின்ற மோசமான நிலைமையாகவும் காணப்படுகின்றது. குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது என்று சட்டம் பரிந்துரைக்கவில்லை. பிணை வழங்குவதற்கான அதிகாரம் சட்டங்களின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனால், சட்டமா அதிபரே பிணை வழங்குகின்ற விடயத்தில் செல்வாக்கு செலுத்த முடியாத அளவில் வல்லமை பெற்றவராகக் காணப்படுகின்றார். இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் மறுப்பது ஏன் என்ற கேள்வி விசுவரூபமெடுத்திருக்கின்றது. பொது மன்னிப்பளித்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஒரு நாள் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனைவிட பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் நடத்தப்பட்டிருந்தன. இவற்றினால் எழுந்த அழுத்தம் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்திருந்தார்கள்.

ஆனால், பொது மன்னிப்பளிக்கப்படவுமில்லை. பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுமில்லை. கைதிகளை விடுதலை செய்வதில் அரசியல் ரீதியாக உறுதியான தீர்மானம் மேற்கொண்டு அதற்குரிய எழுத்து மூலமான உத்தரவை அல்லது அறிவுறுத்தலை சட்டமா அதிபருக்கு இவர்கள் இருவரும் இன்னுமே வழங்கவில்லை. மாறாக போராட்டம் நடத்தியவர்களுக்குப் பதிலளிப்பதற்காக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துவிட்டு மறுபக்கத்தில் சட்டமா அதிபரிடம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறே அவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையிலேயே கைதிகளின் விடுதலை விவகாரம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளின் போக்கு இவ்வாறிருக்க, பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக விடுதலை செய்யப்பட்டிருப்பதையும் எம்மால் காண முடிகின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்தபோது, எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்படும், அவர்கள் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் அளித்த உறுதிமொழியை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். அவர்களில் 11 ஆயிரம் பேரை விசாரணைகளின் பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சியளித்து நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தாமலேயே அரசியல் ரீதியாக முன்னைய அரசாங்கம் விடுதலை செய்திருந்தது. கே.பி. என்றழைக்கப்படுகின்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச ஆயுதக் கொள்வனவு முகவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை. அவர் அரச விருந்தினரைப் போன்று அரச பாதுகாப்புடன் இருந்து வருகின்றார். விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவராகத் திகழ்ந்த கருணா, மற்றும் பிள்ளையான் போன்றவர்களும் கைது செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாக அவர்கள் சுதந்திரமாகவும் செல்வாக்குடனும் சமூகத்தில் வாழவும் அரசியலில் ஈடுபடவும் அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. வேண்டிய இடத்தில் சட்டங்களைப் பயன்படுத்துவதும், அரசியல் ரீதியான இலாப நோக்கில் தேவையான இடத்தில் சட்டங்களைத் தமக்கேற்ற வகையில் வளைத்துக் கொண்டு செயற்படுவதும் அரசாங்கத்தின் போக்காகக் காணப்படுகின்றது.

நல்லாட்சி புரிவதாகக் கூறுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் மனிதாபிமானத்தைத் தூக்கியெறிந்துவிட்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சட்டத்தையும் அரசியலையும் கலந்து குழப்பிக் கொண்டிருப்பது நல்லதல்ல. அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிச் செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை கைதிகள் விடயத்தில் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தங்களைக் கொடுத்துச் செயற்படாமல் மூன்றாம் தரப்பினரைப் போன்று செயற்படுவதாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது கூட்டமைப்பின் தலைமைக்கும் நல்லதல்ல.