Breaking News

கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன ?

வரவு–செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பு வெற்­றி­க­ர­மாக நிறை­வே­றி­விட்­டது. ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து வரவு-செல­வுத்­திட்­டத்தின் வாக்­கெ­டுப்­பின்­
போதும் மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக தமிழ், முஸ்லிம் கட்­சிகள் ஏகோ­பித்த ஆத­ரவை வழங்­கிய முதல் வரவு–செல­வுத்­ திட்­ட­மாக திகழ்­கின்­றது.

விசே­ட­மாக தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்று எதிர்க்­கட்சி வரி­சையில் அமர்ந்­தி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை தற்­போது பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான தேசிய அர­சாங்­கத்தின் 2016ஆம் ஆண்­டுக்­கான வர­வு­–செ­ல­வுத்­திட்டம் கடந்த மாதம் 20 ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. வரவு–செல­வுத்­திட்­டத்தில் வடக்கு, கிழக்­குக்கு ஒதுக்­கிய நிதி போத­வில்லை, தனித்­த­னி­யாக ஒவ்­வொரு அமைச்­சு­க­ளுக்­கு­மான நிதி பற்­றாக்­கு­றை­யா­க­வுள்­ளது, பாது­காப்­புக்­காக மீண்டும் அதி­க­மான நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது, அர­சாங்க ஊழி­யர்கள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை. திடீ­ரென வரிகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன, நாட்டின் ஒட்­டு­மொத்த மக்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­வாறு அமை­ய­வில்லை இவ்­வாறு பல­கு­றை­பா­டுகள் விவா­தத்­தின்­போது சபையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு சார்­பான கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரும் வரவு – செல­வுத்­திட்ட விட­யங்­களை பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளியிலும் மிக கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தார்கள்.

இது தொடர்­பாக தாம் முன்­மொ­ழிந்­துள்ள பரிந்­து­ரை­களை உள்­ளீர்க்­கு­மாறும் கோரி­யி­ருந்­தனர். எனினும் கடந்த இரண்டாம் திகதி மாலையில் வரவு – செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இதன்­போது வரவு – செல­வுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக 159 வாக்­கு­களும், எதி­ராக 52 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டன. வரவு – செல­வுத்­திட்­டத்தில் ஒன்­று­மே­யில்­லை­யெனக் கூறிய மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கடு­மை­யாக விமர்சித்த மஹிந்த அணியும் எதிர்த்து வாக்­க­ளித்த நிலை­யிலும் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பு 107 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கவும் அடுத்து குழு­நிலை விவா­தங்கள் ஆரம்­ப­மா­க­வுள்­ள­தா­கவும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மஹிந்த ராஜ­பக் ஷ, பிரே­மலால் ஜய­சே­கர, மனுஷ நாண­யக்­கார, ரோஹான் ரத்­வத்த, ஜனக்க ஹேரத், கீதா குமா­ர­சிங்க, சிறிலால் கம்லத், ஜனக்க பண்­டார தென்­னக்கோன், ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான புத்­திக பத்­தி­ரண, அத்­து­ர­லிய ரத்ன தேரர், எம்.கே.டி.எஸ்.குண­வர்­தன, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களான சிவ­மோகன், சிவ­சக்தி ஆனந்தன் ஆகியோர் பாரா­ளு­மன்­றுக்கு சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வ­ளித்து ஆட்­சி­மாற்­றத்தின் பங்­கா­ளி­களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய அர­சாங்­கத்தின் வரவு–செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றது. விவா­தங்­க­ளின்­போது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித் ­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் உட்­பட அனைத்து உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்றில் உரை­யாற்­றும்­போது வரவு – செல­வுத்­திட்­டத்தின் மீதான குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். குறிப்­பாக வரவு – செல­வுத்­திட்­டத்தில் காணப்­பட்ட தமிழ் எழுத்­துப்­பி­ழைகள் முதல் நிதி ஒதுக்­கீ­டுகள் உட்­பட பல்­வேறு குறை­பா­டு­களை மிக துல்­லி­ய­மான முறையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்கள். அவ்­வா­றா­ன­வர்கள் திடீ­ரென ஆத­ரித்து வாக்­க­ளித்­தமை ஆச்­ச­ரி­யத்­தையே அளித்­தி­ருக்­கின்­றது.

அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஏகோ­பித்த தீர்­மா­னத்தில் இந்த ஆத­ரவு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யான விட­ய­மா­கின்­றது. குறிப்­பாக கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன் ஆகியோர் பாரா­ளு­மன்­றுக்கு சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. கூட்­ட­மைப்­பினுள் இது­வ­ரை­யிலும் பல்­வேறு தரு­ணங்­களில் பல முரண்­பா­டுகள் மேலெ­ழுந்­தி­ருக்­கின்ற போதும் அவை இவ்­வ­ளவு தூரம் பகி­ரங்­க­மா­ன­தில்லை. ஆனால் முதற்­த­ட­வை­யாக அவ்­வி­டயம் பகி­ரங்­க­மாக வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

முன்­ன­தாக கூட்­ட­மைப்­பினுள் முரண்­பா­டுகள் எழு­கின்­ற­போது அல்­லது அது தொடர்­பி­லான மாறு­பட்ட விட­யங்கள், கருத்­துக்கள் வெளியா­கின்­ற­போது வேறு­பட்ட கொள்­கை­களை கொண்ட கூட்­டாக இருப்­பதால் கருத்து மாற்­றங்கள் எழு­வது சகஜம், கூட்­மைப்பு ஜன­நா­யக கட்­ட­மைப்பு ஆகவே இவ்­வா­றான விட­யங்­களை பெரி­தாக கரு­தா­தீர்­க­ளென தலை­மையும், சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் சிலரும் மக்­க­ளுக்கும் ஊடகங்­க­ளுக்கும் கூறு­வார்கள். தீர்­மா­னங்­களில் எமக்கு உடன்­பா­டுகள் காணப்­ப­டா­த­போதும் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மைக்­காக அதற்கு ஆத­ர­வாக இருக்­கின்றோம் என்ற வகை­யி­லான கருத்­துக்­க­ளையும் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ உறுப்­பி­னர்கள் குறிப்­பி­டு­வார்கள். இதுவே வழ­மை­யாக இருந்து வந்­துள்­ளது.

ஆனால் தற்­போது நிலைமை மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. உள்­ளக முரண்­பா­டுகள் வரவு –செல­வுத்­திட்­டத்தில் பிர­தி­ப­லித்து விட்­டன. முரண்­பா­டுகள் இருக்­கின்­றதா? இல்­லையா என்­பதை ஆராய்­வது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மல்ல. மாறாக, கூட்­ட­மைப்பு கொள்­கை­வ­ழியில் பற்­று­று­தி­யுடன் ஒன்­று­பட்டு, அதன் அடிப்­ப­டையில் தமி­ழரின் அர­சியல் தலைமை கட்­ட­மைப்­பாகத் திகழ­வேண்டும் என்­ப­தையும் அதுவே உரி­மைக்­காக விலை­ம­திப்­பற்ற ஈகங்­களை செய்த தமிழ் மக்­களின் ஆரோக்­கி­ய­மான எதிர்­கா­லத்­திற்கு உறு­து­ணை­யாக அமையும் என்­ப­தையும் அனை­வரும் கருத்தில் கொள்­ள­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

நல்­லெண்ண சமிக்ஞை வரவு–செல­வுத்­திட்ட வாக்­கெ­டுப்பில் எதிர்க்­கட்சி வகி­பா­கத்தைக் கொண்­டி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ன செய்­யப்­போ­கின்­றது என்ற எதிர்­பார்ப்­புக்கள் வலுத்­தி­ருந்த நிலையில் இரண்டாம் திகதி வரவு–செல­வுத்­திட்­டத்­திற்­கான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வி­ருக்­கையில், அதற்கு முதல்நாள் காலை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் வரவு–செல­வுத்­திட்டம் தொடர்­பான தீர்­மானம் எடுப்­ப­தற்­கான பாரா­ளு­மன்­றக்­ குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளதால் அனை­வரும் வரு­கை­த­ர­ வேண்­டு­மென கொழும்­புக்கு வெளியி­லி­ருந்த கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. தொடர்ந்து இரண்டாம் திகதி காலையில் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்டம் ஆரம்­ப­மா­கி­யது. இதன்­போது அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் அர­சாங்கம் வாக்­கு­று­தியை மீறி­விட்­டது. வவுனியா அர­சாங்க அதி­பரை மாற்றும் விடயம் ஒரு தொலை­பேசி அழைப்­பி­லேயே செய்­து­மு­டித்­து­வி­டலாம் அதனைக் கூட செய்­யா­தி­ருக்­கின்ற நிலையில் எவ்­வாறு நாம் வரவு–செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்க முடி­யு­மென கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது.

தற்­போது சர்­வ­தேச நாடு­களில் பெரும்­பா­லா­னவை இலங்கை அர­சாங்­கத்தின் விசா­ரணைப் பொறி­மு­றைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி வரு­கின்­றன. இலங்கை அர­சாங்­கமும் பல வாக்­குறுதி­களை வழங்­கி­யுள்ள நிலையில் அந்­நா­டுகள் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றன. ஆகவே நாம் நல்­லெண்ண சமிக்­ஞை­யாக இந்த வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்போம். எதி­ராக வாக்­க­ளித்தால் நல்­லெண்ண சூழல் ஏற்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் அதனை குழப்­பி­ய­வர்­க­ளா­கவே எம்மை சர்­வ­தேசம் கணித்து விடும். அதுமட்­டு­மின்றி பெரும்­பான்மைத் தரப்­புக்­களும் அதனை பிர­சார கரு­வி­யாக எடுத்­து­விடும். ஆகவே நாம் நல்­லெண்ண சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தும் முக­மாக ஆத­ர­வாக வாக்­க­ளிப்போம். ஒருவேளை அர­சாங்கம் எமது கோரிக்­கை­களை நிறை­வேற்றத் தவ­று­மாயின் நாம் அடுத்த கட்­ட­மாக எடுக்­கப்­போகும் கடு­மை­யான முடி­வுக்­கான கார­ண­மாக இதனை கூற­மு­டி­யு­மென பதில் வழங்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து கூட்­ட­மைப்பு வாக்­கெ­டுப்பில் கலந்து கொண்டு வாக்­க­ளித்­தி­ருந்­தது. சமு­க­ம­ளிக்­கா­த­வர்­களின் தெளிவுபடுத்தல் இந்­நி­லையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றது முதல் அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணி­வி­டு­விப்பு, அர­சாங்க அதிபர் இட­மாற்றம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எமக்கு அளித்­த­வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதே­ச­மயம் வரவு–செல­வுத்­திட்­டத்தின் மீதான விவாத உரை­களில் அனைத்து தரப்­பி­னரும் அதனை சாடியே உரை­யாற்­றி­யி­ருக்­கின்­றார்கள். நாங்கள் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­போ­கிறோம் என்ற தகவல் வெளியா­கிய பின்­னரே, அவ­­சர அவ­ச­ர­­மாக வடக்கு மாகா­ணத்­திற்­கென பத்து திட்­டங்­க­ளுக்­காக நிதி­யொ­துக்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­திற்குக் காத்­தி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பினும், பாரா­ளு­மன்­றத்தில் வர­வு-­–செ­லவுத் திட்டம் கைய­ளிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக வடக்கு மாகா­ண­ ச­பை­யுடன் கலந்­தா­லோ­சிக்­காமல் இருந்­து­விட்டு எதிர்ப்­புகள் எழுந்­துள்ள நிலையில், இந்த அறி­விப்பு வந்­துள்­ள­மை­யையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம். இது வெறும் அறி­விப்­புதான் இன்னும் அங்­கீ­காரம் பெற­வில்லை இதுவும் இந்த அர­சாங்­கத்தின் ஏனைய வாக்­கு­று­தி­களைப் போன்றே காற்றில் கரை­ய­வி­டப்­ப­டாது என்­ப­தற்கு எந்­த­வித உத்­த­ர­வா­தமும் இல்லை இத்­த­கைய சூழலில் வர­வு–-­செ­லவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்­கெ­டுப்பில் ஆத­ர­வ­ளிக்கும் முடிவு எந்த உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரால் எடுக்­கப்­பட்­டது என்­பது குறித்து எமக்கு குழப்­பங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இருப்­பினும் அர­சாங்­கத்­திற்கு எமது எதிர்ப்பை வெளியி­டு­மு­க­மா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ருக்கு எமது அதி­ருப்­தியைத் தெரி­விப்­ப­தற்­கா­கவும் எமது வேண்­டு­கோளை ஏற்று தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு வாக்­க­ளித்த மக்­களின் உணர்­வு­களை மதிக்­கின்ற வகை­யிலும் கூட்­ட­மைப்பின் ஐக்­கி­யத்­திற்குக் குந்­தகம் ஏற்­ப­டாத விதத்­திலும் நாம் இந்த வாக்­கெ­டுப்­பி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்கத் தீர்­மா­னித்தோம் என ஒதுங்­கி­யி­ருந்­த­மைக்­கான தெளிவு­ப­டுத்­த­லாக கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன் ஆகியோர் முன்­வைத்­தி­ருக்­கின்­றார்கள்.

மறு­த­லிக்க முடி­யா­தவை ஒரு கருப்­பொருள் குறித்தோ அல்­லது விட­ய­தானம் குறித்தோ தீர்­மா­ன­மொன்றை எடுப்­ப­தற்­காக வாக்­கெடுப்பு செய்­யப்­படும் போது பெரும்­பான்­மை­யான அங்­கீ­காரம் கிடைக்­கு­மாயின் அதுவே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. அதுவே ஜன­நா­யக தத்­து­வத்தின் சிறந்த பண்­பு­மா­கின்­றது. இருப்­பினும் பெரு­வா­ரி­யா­ன­வர்­களின் அங்கீ­காரம் பெற்ற அனைத்து தீர்­மா­னங்­களும் நூற்­றுக்­குநூறு வீதம் சரி­யா­ன­வை­யாக அமைந்­தி­ருக்­காத சந்­தர்ப்­பங்­களும் காணப்­ப­டு­கின்­றன. அதே­போன்று சிறு­வா­ரி­யா­ன­வர்கள் எதிர்த்த விட­யங்கள் கால­வோட்­டத்தில் சரி­யா­ன­தாக அமைந்த சந்­தர்ப்­பங்­களும் காணப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக ரஷ்யப் புரட்சி கால­கட்­டத்தில் போல்ஷ்விக் மற்றும் மென்ஷ்­விக்­கு­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பாடு அதே போன்று இந்­தி­யாவில் மகாத்மா காந்தி– - பட்டேல், மகாத்மா காந்தி, - ஜவ­ஹர்லால் நேரு ஆகி­யோ­ருக்­கி­டையில் இந்­திய விடு­த­லைப்­போ­ராட்டம் தொடர்­பாக எழுந்த கருத்து வேற்­று­மை­களும் மேற்­கு­றித்த விட­யத்­தினை சான்று பகர்­வ­தாக உள்­ளன. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்­வு­காண்­ப­தற்கே தமி­ழர்கள் விரும்­பு­கின்­றார்கள் என்­பதை உறு­தி­யாக தெரி­வித்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, நாட்டின் இறை­மையை பாது­காப்­ப­தற்­கா­கவும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நிரந்­தர அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் ஏற்­க­னவே ஐ.நா. மனித உரிமை சபையில் அதி­யுச்ச நல்­லெண்ண சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்­தி­விட்­டது.

தற்­போது இரண்­டா­வது தட­வை­யா­கவும் நல்­லெண்ண சமிக்ஞை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வரவு–செல­வுத்­திட்ட வாக்­கெ­டுப்பில் கூட்­ட­மைப்பு எதிர்த்து வாக்­க­ளித்­தி­ருந்­தாலோ அல்­லாது விட்டால் வெளிந­டப்புச் செய்­தி­ருந்­தாலோ அல்­லது சபையில் நாம் கூறிய கருத்­துக்­களை உள்­வாங்­க­வில்­லை­யென காரணம் கூறி ஆகக்­கு­றைந்­தது வாக்­கெ­டுப்பில் பங்­கு­பற்­றாது விட்­டி­ருந்­தாலோ கூட வாக்­கெ­டுப்­பின்­போது இவ் ­வ­ரவு – செல­வுத்­திட்டம் தோல்­வி­யுற்­றி­ருக்­காது. காரணம் ஆளும் தரப்பு வரவு–செல­வுத்­திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­கான பெரும்பான்மை பலத்தை முழுமையாகவே கொண்டிருந்தது. எந்த வொரு சந்தர்ப்பத்திலும் வாக்களிப்பில் பெரும் பான்மை கிடைக்காது போய்விடக்கூடிய நெருக்கடி நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கவில்லை. அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிப்பதற்காக நிபந்தனைகளை விதித்திருந்தாலும் அரசாங்கம் அதனை கருத்திலெடுத்திருக்குமா என்பது சந்தேகமே.

அந்நிலையில் நிபந்தனையின்றி வாக்களிப்பைச் செய்ததன் பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருப்பது எவ்வளவு தூரம் சாத்தியமான சாணக்கியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் வரவு– செலவுத்திட்டம் குறைகள் நிறைந்தவை என்பதை பகிரங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கூறியிருக்கின்றார்கள்.

அரசியல் விஞ்ஞானத்தில் காலத்தின் தேவையறிந்து முடிவுகளை எடுப்பது தவறல்ல. ஆனால் அவை தீர்க்க தரிசனமானவையாக அமையவேண்டும். வாய் வார்த்தையை மட்டுமே நம்பி அள்ளி ஆணை வழங்கிய சாதாரண பொதுமக்களின் விடியலை உறுதிப்படுத்துவதாய் இருக்கவேண்டும். தலைநகரில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் சொந்தமண்ணிற்கு திரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு வாசலில் நீண்ட வரிசையில் கூடும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் போன்ற விடயங்களுக்கான உதவிகளை கோரிநிற்கும் போது வரவு –செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தகைய பதில்களை வழங்கப் போகின்றனர் என்பதே தற்போதைய கேள்வி. மலைபோல் மக்கள் சக்தியிருக்கும் வரையில் தான் எந்த புதிய சவாலையும் சாதிக்கமுடியும் என்பது திண்ணம்.

-பிரம்மாஸ்திரன்-