ஆணழகருக்கான போட்டி - வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்பு
2015ஆம் ஆண்டுக்கான ஆணழகருக்கான போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆனந்த கல்லூரி
குலரத்ன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 68ஆவது தடவையாக நடைபெறவுள்ள ஆணழகர் போட்டிகளுக்கு இம்முறை மொத்தம் 140 வீரர்கள் பங்குபற்றகின்றார்கள். வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மிஸ்டர் ஸ்ரீலங்கா என்ற பெயரில் நடத்தப்படும் ஆணழகருக்கான போட்டிகள் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை பொடிபில்டிங் சம்மேளனத்தின்தலைவர் கித்சிறி பெர்னாண்டோ பேசுகையில்,
68 வருட பழமைவாய்ந்த எமது சம்மேளனத்தின் 2015ஆம் ஆண்டுக்கான ஆணழகருக்கான போட்டியில் நாடுமுழுவதிலிருந்தும் வீரர்கள் பங்குபற்றுகிறார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து 12 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இது எமது சம்மேளத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
வருடா வருடம் மேம்பட்டுக்கொண்டே செல்லும் எமது இந்தப் போட்டிகள் இம்முறை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் வீரருக்கு ஆணழகர் பட்டமும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன. அதேபோல் இளையோருக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளது. இதுமட்டுமன்றி பிரபலங்களின் ஆணழகர் போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இப்போட்டிகளுக்கு இலங்கை லொத்தர் சபை அனுசரணை வழங்குகின்றது.