Breaking News

அவன்கார்ட் தலைவருடன் அமெரிக்கா சென்ற விஜயதாச ராஜபக்‌ஷ குடும்பம் - சரத் பொன்சேகா

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும்,
ஒன்றாக அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.

சட்டவிரோதமாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை வைத்து, பில்லியன் கணக்கான வருமானம் பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கிறது அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனம். இந்த நிறுவனம் சட்டபூர்வமாகவே செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதால், சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதேவேளை, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், அவன்ட் கார்ட் நிறுவனத்துக்குச் சார்பாகவே கருத்து வெளியிட்டு வருவதுடன், இந்த விவகாரம் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்யக் கூடாது என்ற தானே வலியுறுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் மீதும், சரத் பொன்சேகா மீதும், அவன்ட் கார்ட் நிறுவனம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. இதையடுத்து. அந்த நிறுவனத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்த சரத் பொன்சேகா இன்று கொழும்பில் பரபரப்பான பல படங்களை வெளியிட்டார்.

2006ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டிஸ்னிலான்டுக்கு சுற்றுலா சென்றிருந்ததைக் காட்டும் ஒளிப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த சுற்றுலாப் பயணத்துக்காக இவர்கள் பயன்படுத்திய 20 அடி நீளமான லிமோஸ் ரக படகு காரில் எடுக்கப்பட்ட படங்களையும், இரு குடும்பத்தினரும் ஒன்றாக உணவருந்தும் காட்சிகள் அடங்கிய படங்களையும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார்.

மேஜர் சேனாதிபதியும், விஜேதாச ராஜபக்சவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இதனால் அவன்ட் கார்ட் நிறுவனத்தைக் காப்பாற்ற அவர் முனைவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் மேஜர் சேனாதிபதியுடன் ஒரு தடவை மாத்திரம் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், நேரில் சந்தித்ததில்லை என்றும் கூறிய சரத் பொன்சேகா, தனக்கு 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு ஏனையவர்களிடம் இருந்து பணத்தை வாங்குவதாக இருந்தால், அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச வழங்க முன்வந்த 2000 மில்லியன் ரூபாவையும், 100 ஏக்கர் தென்னந்தோட்டத்தையும் நிராகரிக்காமல், தான் பெற்றுக் கொண்டிருப்பேன் என்றும் சரத் பொன்சேகா, தெரிவித்தார்.