துறைமுகத் துறையில் மோசடி - 225 பில்லியன் ரூபா கடன்
துறைமுகத் துறையில் இடம்பெற்றுள்ள மோசடியால் 225 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளதாக துறைமுகப் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நிலக்கரி கொண்டு செல்வதற்காக இரு கப்பல்கள் கொள்வனவு செய்துள்ளமையால் நாளாந்தம் 13 ஆயிரம் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறை போக்குவரத்து சிவில் விமானம் மற்றும் கப்பற்துறை அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டாகும் போது கொள்கலன் ஏற்றி இறக்கும் மத்திய நிலையமாக இலங்கையை மாற்றுவதையே பிரதான இலக்காக கொண்டுள்ளேன். அத்துடன் துறைமுக கப்பற்துறை அமைச்சின் கீழ் உள்ள மோசடிகளை முற்றாக ஒழிப்பதோடு இவ் அமைச்சில் காணப்படும் அரசியல் ரீதியான கலாசாரத்தையும் மாற்றியமைக்கவுள்ளோம்.
கடந்த கால ஆட்சியில் சீன நிறுவனத்துடன் துறைமுக அதிகார சபை மேற்கொண்ட உடன்படிக்கையினால் 15 சதவீதமான இலாபமே கிடைக்கின்றது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை துறைமுக அதிகார சபை 32, 232 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. 23.3 மில்லியன் ரூபா கொழும்பு துறைமுகத்தின் ஊடாக ஈட்டப்பட்டுள்ளது.
இதில் 1.7 மில்லியன் ரூபா கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செலவிடப்பட்டிருக்கின்றது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பொறுத்தவரையில் முதலாம் கட்ட ஆரம்ப நிகழ்வுக்காக 113 மல்லியன் ரூபா செலவிடப்பட்டிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி தலைமையில் பாரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்நிலையில் எமது ஆட்சியில் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வை செய்திருந்தோம். அதற்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைவான தொகையே செலவிட்டோம்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கம்பனிகளுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக களஞ்சிய வசதிகள் காணப்படுகின்றபோதும் எவ்விதமான இலாபமும் கிடைக்கவில்லை.
மேலும் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக 24 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது. அதில் 819.76 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்திற்காக காணி சுவீகரிப்பு உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. சுவீகரிப்பு செய்யப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு 2 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
செப்டெம்பர் 31 ஆம் திகதியாகும் போது 225 மில்லியனாக நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை உயர்வடைந்துள்ளது.
திருகோணமலை, ஒலுவில், காங்கேசன்துறை ஆகியவற்றை இலாபமீட்டும் துறைமுகங்களாக மேம்படுத்தவுள்ளோம்.
அத்துடன் 10 ஆயிரம் ரூபா சம்பளத்திற்காக இளைஞர், யுவதிகள் துறைமுகத் துறையில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கத்திற்காகவே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவறான முறையில் சேவையில் உள்வாங்கப்பட்டாலும் அவர்களை நாம் பணி நீக்கம் செய்யப்போவதில்லை.
அவர்களுக்காக உரிய பொறி முறைகளை வகுத்து அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவுள்ளோம். நாம் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க முயலவில்லை என்றார்.