இலவசக் கல்வியையும் வடக்கிற்கான நிதியையும் இல்லாது செய்தவர் யார் - பிரதமர்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணியினால் கொண்டு வரப்படுகின்ற நம்
பிக்கையில்லாப் பிரேரணையானது உண்மையில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரானது அல்ல. மாறாக அரசாங்கத்துக்கு எதிராகவே இதனை கொண்டு வர முற்படுகின்றனர். எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.
எனினும் நாம் அரசியலமைப்புச் சட்டத்துக்கே மதிப்பளிப்போம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
நேற்று சபையில் தெரிவித்தார்.
இதேவேளை இலவசக் கல்வியை இல்லாது செய்வதற்கு முயற்சித்தது யார். வடக்கின் கல்வித்துறைக்கான நிதியை இல்லாது செய்தது யார் இதனை என்னால் இங்கு ஒப்புவிக்க முடியும். அதனை நான் நிரூபித்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் கல்வி அமைச்சர் பத்துல குணவர்த்தன ஆகியோர் பாராளுமன்றப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறீர்களா என்றும் சவால் விடுத்தார்.
மேலும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை என்பதற்குப் பதிலாக தெரிவுக் குழுவை நியமித்து காரணங்களைக் கண்டறிய முடியும் என்று பிரதமர் வலியுறுத்திய போதிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையே வேண்டும் என்று மஹிந்த ஆதரவு அணியும் ஜே.வி.பியும் கோரின. எனினும் இவ் விடயத்தை ஜனவரி மாதத்தின் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று சபாநாயகர் கருஜயசூரிய திட்டவட்டமாக சபையில் கடும் தொனியில் அறிவித்தார்.
இதனையடுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்டிருந்த சர்ச்சை நிலை முடிவுக்கு வந்தது.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணியினர் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியையடுத்து ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதமும் கருத்து மோதலும் சர்ச்சை நிலையும் எழுந்தது.
வாசுதேவ
முன்னதாக ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய மஹிந்த ஆதரவு அணியின் வாசுதேவ நாணயக்கார எம்.பி. கூறுகையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாம் முன்வைத்துள்ளோம். அதனை விவாதிப்பதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் அது எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறித்த திகதியை அறிவிக்க முடியுமா எனக் கேள்வியெழுப்பினார்.
சபாநாயகர்
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில் இவ்விடயம் தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன் ஜனவரி மாதத்தின் அமர்வுகளின் போது இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
சபை முதல்வர்
இதேவேளை எழுந்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகயைில் உண்மையாகவே கூறுவதாயின் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது வேடிக்கையாக இருக்கிறது என்றார். அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கையொப்பமிட்டிருக்கவில்லை என்றார்.
இதன் போது சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
அனுர குமார
இதன் போது கருத்து வெளியிட்ட ஜே.வி.பி தலைவரும் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவுமான அனுர குமார திசாநாயக்க எம்.பி. கூறுகையில்
நிதியமைச்சரினால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தையும் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஒன்றாக நோக்க முடியாது. வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அதற்கு ஆதரவு எதிர்ப்பு தொடர்பில் வாக்கெடுப்புக்குவிடுத்து பிரதிபலனைக் கண்டறிய முடியும். எனினும் நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டு வர முடியாது எனக் கூறிவிட முடியாது. இது நியாயமும் இல்லை என்றார்.
பிரதமர்
இதனையடுத்து விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நாம் எடுத்து நோக்குவோமெனில் வரவு செலவுத் திட்டம் என்பது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்கானதாகும்.
வரவு – செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுமானால் பிரதமர் உட்பட அமைச்சரவை வாபஸ் பெற வேண்டும். இது தான் எமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நிதி நிர்வாகத்துக்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே பாரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நிதி அமைச்சரினால் முன்வைக்கப்படுகின்ற வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்ததும் அதில் குறைபாடுகள் இருப்பின் குழுநிலையின் போது திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் அது நிறைவுக்கு வர வேண்டும். இதன் பின்னர் வரவு செலவுத்திட்டத்தைக் காரணம் காட்டி நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரமுடியாது.
நாம் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் முகம் கொடுப்போம். அதற்குத் தயாராகவும் இருக்கிறோம்.
எனினும் அரசியலமைப்புச் சட்டத்துக்கே நாம் மதிப்பளிப்போம். இங்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டிருப்பதான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது நிதி அமைச்சருக்கு எதிராக அல்லாது அரசாங்கத்துக்கு எதிரானதாகவே இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாம் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளோம். அதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை.
தேவைப்பட்டால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து அதில் மேற்படி விடயங்களை உள்வாங்கி ஆராய முடியும்.
இதுவே சிறப்பானதாகவும் அமையும். அதன் போது விடயங்களை அறிக்கையாக சமர்ப்பித்து அதில் தவறுகள் கண்டறியப்பட்டால் அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கோ அல்லது தெரிவுக் குழுவுக்கு செல்வதற்கோ எதுவானாலும் நாம் தயாராகவே இருக்கிறோம்.
ஆனால் யார் இந்நாட்டில் இலவசக் கல்வியை இல்லாது செய்தது. இதனை நான் ஒப்புவித்தால் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யத்தயாரா என பந்துல குணவர்த்தனவிடம் கேள்வியெழுப்பினார். இதனை உறுதிப்படுத்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். வடக்கின் கல்வித்துறைக்கான நிதியை யார் இல்லாது செய்தது. அந்தத்தவறையும் புரிந்து யார்? தவறு செய்தவர்கள் பாராளுமன்றத்திலிருந்து பதவி துறக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருப்பாரேயானால் அவரும் இந்தப் பாராளுமன்றத்திலிருந்து பதவி துறந்து வெளியேற வேண்டும் என்றார்.
தினேஷ்
இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது கேள்வி எழுப்பினேன். எனினும் இந்த விடயமாக ஜனவரி மாதத்தில் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. நிதியமைச்சர் தொடர்பில் பிரதமரால் வேறு யோசனைகளும் முன்வைக்கப்படலாம். அதனையும் நாம் பரிசீலிப்போம் எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு திகதி அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
சபாநாயகர்
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில் இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசித் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி மாத அமர்வின் போது ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.